`இடியோ, மழையோ, புயலோ'... 11 நாட்கள் எரியும் மகா தீபம்... மலை உச்சியில் அணையாமல் எரிவது எப்படி..? பின்னால் இருக்கும் சூட்சுமம்

Update: 2024-12-12 15:12 GMT

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வாக, 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபம் ஏற்ற, ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பல லட்சக்கணக்கான பக்தர்களை காந்தம் போல் திருவண்ணாமலைக்கு ஈர்க்கும் மகா தீபம், செப்பினால் ஆன கொப்பரையில் ஏற்றப்பட உள்ளது. இந்த தீப கொப்பரையானது 375 கிலோ எடையும், 6.5 அடி உயரமும் கொண்ட‌து.

சிவன், விஷ்னு மற்றும் பிரம்மா ஆகிய மூவரை அடையாளப் படுத்தும் வகையில், மூன்று அடுக்கு கொண்டது இந்த தீபகொப்பரை.

மகா தீபத்தை ஏற்ற, நாள்தோறும் 100 மீட்டர் கடா துணி, 2 கிலோ கற்பூரம், 650 கிலோ நெய் பயன்படுத்தப்படும். இந்த நெய்யை, பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலுக்கு காணிக்கையாக அளிப்பார்கள்.

பழங்காலத்தில் 3 நாட்கள் ஏற்படும் கார்த்திகை தீபம், நெய் காணிக்கை அதிகரித்த‌தால், 11 நாட்கள் ஏற்றப்படுகிறது.

மொத்தமாக, 7 ஆயிரத்து 150 கிலோ நெய், 22 கிலோ கற்பூரம் மற்றும் ஆயிரத்து 200 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்படும்.

11 நாட்கள் ஏற்றப்பட்ட பின்பு, தீப கொப்பரை அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, தீப மை சேகரிக்கப்படும்.

இந்த மைக்கு, ஆருத்ரா தரிசனத்தன்று சிறப்பு பூஜைகள் செய்து, சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு நெற்றியில் வைக்கப்படும். அதன் பின்னர், தீப மை பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்