"மருத்துவமனையில் ஜக்கி... கோவை ஈஷாவில் 6 பேர் மாயமான அதிர்ச்சி..! - ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

Update: 2024-03-21 11:03 GMT

கோவை ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய ஆறு பேர் காணாமல் போயுள்ளதாக, காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பணியாற்றி வந்த தனது சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா, காணாமல் போய்விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என தென்காசி மாவட்டம் குலசேகரபட்டியை சேர்ந்த விவசாயி திருமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5 ம் தேதி ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா, கோவை மாவட்டம் ஆலாந்துறை காவல்நிலையத்தில் அளித்த புகார் மீது பதியப்பட்ட வழக்கின் விசாரணை மந்த கதியில் நடந்து வருவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில், ஈஷா யோகா மையத்தில் இருந்து கடந்த 2016ம் ஆண்டு முதல் வெவ்வேறு தேதிகளில், 6 பேர் காணாமல் போய் உள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

காணாமல் போனவர்கள் குறித்த விசாரணையை விரைவுப்படுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்