டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் ஓய்வு

Update: 2024-10-11 09:03 GMT

ரபேல் நடால்... டென்னிஸ் உலகில் மறுக்கவும் மறைக்கவும் முடியாத பெயர்... கடந்த 23 ஆண்டுகளாக டென்னிசில் சிம்ம சொப்பனமாக விளங்கிய நடால், தனது ஓய்வு முடிவை அறிவித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்...

கடந்த 2001-ஆம் ஆண்டு சர்வதேச டென்னிசில் கால்பதித்த ரபேல் நடால், தனது துடிப்பான ஆட்டத்தின் மூலம் தனக்கென ஏராளமான ரசிகர்களை பெற்றார். இயற்கையாக வலதுகை பழக்கம் கொண்ட நடால், டென்னிஸ் போட்டிக்காக இடதுகை பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்..

சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், டென்னிஸ் உலகை ஆட்டி படைத்தபோது, அவருக்கு நிகரான எதிரியாக களமிறங்கி திக்குமுக்காட செய்தார் நடால்.. தனது வெற்றிக்காக களத்தில், ஆக்ரோஷமாக கடுமையாக போராடும் குணம் கொண்ட நடால், முன்னணி வீரர்களை வீழ்த்தி, நம்பர் ஒன் வீரராகவும் விளங்கினார்.

22 கிராண்ட்ஸ்லாம், 90 ஏடிபி தொடர்கள், ஒரு ஒலிம்பிக் பதக்கம் என ஏராளமான பட்டங்களை வாங்கி குவித்த நடால், கடந்த சில ஆண்டுகளாக காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். சிலநாட்களாகவே அவர் ஓய்வுபெறுவதாக தகவல் பரவிய நிலையில், எக்ஸ் தளத்தில் வீடியோ பதிவிட்டு, அதிகாரப்பூர்வமாக தனது ஓய்வை அறிவித்துள்ளார் நடால்..


அதில் கடந்த 2 ஆண்டுகளாக கடினமான சிக்கல்களை எதிர்கொண்டு வந்ததாகவும், காயம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டென்னிஸை விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பெற்றோர், உறவினர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள நடால், நவம்பரில் நடைபெறும் டேவிஸ் கோப்பை தொடரே தனது கடைசி தொடராக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

டென்னிஸ் உலகின் பிக்-த்ரீ என்று அழைக்கப்பட்ட ரோஜர் பெடரர், ரபேல் நடால், ஜோகோவிச் ஆகிய மூவரில், 2 பேரின் சகாப்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பெடரரை தொடர்ந்து நடாலும் ஓய்வை அறிவித்துள்ளதால், டென்னிஸ் ரசிகர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விரைவில் தனது இறுதிப்போட்டியில் விளையாடும் நடாலை, பிரியாவிடையுடன் அனுப்பும் தருணத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்