`தமிழகத்தில் எழுத, படிக்க தெரியாத 5 லட்சம் பேர்'... இன்று நடந்த எழுத்தறிவு தேர்வு
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் எழுத படிக்க தெரியாத 15 வயதுக்கு மேற்பட்ட ஐந்து லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் இன்று அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெறுகிறது.
இந்திய அளவில் அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளா உள்ள நிலையில், தமிழகத்தில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு தொடர்ச்சியாக அடிப்படையில் தமிழில் எழுதுதல், வாசித்தல், அடிப்படை கணக்கு போன்றவை கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2025- 26-ஆம் ஆண்டுக்குள் தமிழகம் நூறு விழுக்காடு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், 15 வயதிற்கு மேற்பட்ட ஆறு லட்சத்து 14 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களுக்கு தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் முதல் வழங்கப்பட்டு வந்தது. அவர்களில் 5 லட்சத்து 9 ஆயிரத்து 459 பேருக்கு இன்று தமிழகம் முழுவதும் தேர்வு நடைபெற்றது. 30 ஆயிரம் மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் சென்னை அமைந்தகரை சுப்புராயன் தெருவில் உள்ள அரசு பள்ளியில் நடந்த எழுத்தறிவு தேர்வில் பலர் ஆர்வமாக பங்கேற்று தேர்வை எழுதினர்.