தூங்கிக்கொண்டிருந்த மகன்... இரும்பு ராடால் அடித்தே கொன்ற அப்பா... அதிர வைத்த வாக்குமூலம்

Update: 2025-01-13 13:39 GMT

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே கவுண்டம்பட்டி சக்தி நகர் பகுதியில் பெற்ற மகனை, இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற தந்தையை எடப்பாடி போலீசார் கைது செய்தனர்.

இந்த பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளியான மாதேஸ்வரன் என்பவருக்கு சீனிவாசன், சண்முகம் என்ற 2 மகன்களும், மலர்கொடி என்ற ஒரு மகளும் உள்ளனர்.

இதில், இவர்களின் தாயார் இறந்த நிலையில், திருமணம் ஆன மகள் மலர்கொடி, தனது கணவருடன் வசித்து வருகிறார். இவரின் சகோதரரான சண்முகமும், தனது அக்கா வீட்டில் தங்கியபடி, ஒரு கொரியர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

மூத்த மகன் சீனிவாசனுக்கு, திருமணம் ஆன 2 ஆண்டுகளில், அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் தான், தந்தை மாதேஸ்வரனும், மகன் சீனிவாசனும் ஒன்றாக வீட்டில் வசித்து வந்த நிலையில், இரவில் தூங்கிக் கொண்டிருந்த போது, மகன் சீனிவாசனை, தந்தை ஒரு கம்பியால், தலையில் பயங்கரமாக தாக்கவே, அவர் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்திருக்கிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த எடப்பாடி போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

இந்த விவாரத்தில், வீட்டிற்கு செலவிற்கு பணம் ஏதும் தராத மகன் சீனிவாசன், மதுபோதையில் பக்கத்து வீட்டு குழந்தைகளிடம் செய்த தகராறை தட்டிக்கேட்டதால், தந்தை என்றும் பாராமல், தன்னை காதில் ரத்தம் வரும் அளவிற்கு தாக்கிய ஆத்திரத்தாலேயே, மகனை அடித்து கொன்றதாக தந்தை மாதேஸ்வரன் போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளார். இப்போது, மாதேஸ்வரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்