நெல்லை மாவட்டம் கோடகநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கேரள மாநில கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கழிவுகளை கேரள அரசே அப்புறப்படுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில், கேரள அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அப்புறப்படுத்த கேரள அதிகாரிகள் குழு நெல்லை வந்தடைந்தது. திருவனந்தபுரம் உதவி ஆட்சியர் தலைமையிலான 30 பேர் கொண்ட அதிகாரிகள் நெல்லை வந்தடைந்தனர். நெல்லை மாவட்டம் கோடகநல்லூர், கல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுகள் அகற்றும் பணி 6 குழுக்களாக மேற்கொள்ளப்படுகிறது.
நெல்லை மாவட்ட உதவி ஆட்சியர் அம்பிகா ஜெயின், திருவனந்தபுரம் மாவட்ட உதவி ஆட்சியர் சாக்ஷி ஆகியோர் தலைமையில் இரு மாநில அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்திய நிலையில், ஆறு இடங்களில் ஒரே நேரத்தில் கழிவுகளை அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக கூடுதலாக ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு கழிவுகள் அப்புறப்படுத்துகின்றன.இந்த கழிவுகள் 16 டாரஸ் லாரிகளில் ஏற்றப்பட்டு கேரளாவிற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, கேரள எல்லை வரை தமிழக அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.