சென்னை இளைஞர்களை மரண பீதியாக்கிய கோரம் - இனி பெற்றோர் கிட்ட பொய் சொல்லாதீங்க
மகாபலிபுரத்தில் அழுகி ஒதுங்கிய
சென்னை இளைஞர்களின் உடல்
விளையாட்டு வினையான பயங்கரம்
மாமல்லபுரம் கடலில் குளித்து மாயமான கல்லூரி மாணவர்களின் உடல் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய சோகச் சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
விளையாட்டு வினையாகும் என பெற்றோர்கள் பலமுறை அறிவுரைக் கூறினாலும், ஆபத்தை உணராமல் ஆட்டம் போடும் இளம் வயதினரை பீதிக்குள்ளாக்கியுள்ளது மாமல்லபுரம் கடற்கரையில் அரங்கேறிய சம்பவம்...
சென்னை அண்ணாநகர் கம்பர் காலனி பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரின் மகனான கிரீஷ் கேசவ், கலைக்கல்லூரியில் பிகாம் படித்து வந்தார்.
இதே பகுதியில் கறிக்கடை நடத்தி வரும் ரிஸ்வான் என்பவரின் 18 வயது மகன் ரியாஸ். கேட்டரிங் படிப்பு முடித்து விட்டு திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளில் பகுதி நேர சமையல் கலைஞராக பணிபுரிந்து வந்துள்ளார்.
நண்பர்களான இருவரும் சக நண்பர்களான ரக்ஷத், ஆகாஷ், ஆர்யா ஆகியோருடன் மெரினா பீச்சுக்கு செல்வதாக பெற்றோர்களிடம் கூறி விட்டு மாமல்லபுரம் சுற்றுலா சென்றுள்ளனர்.
அங்கு 5 பேரும் மீனவர் பகுதியில் உள்ள கடலில் உற்சாகத்துடன் குளிக்க, கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டுள்ளது,...
இந்நிலையில் திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி கிரீஷ், ரியாஸ் இருவரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு மாயமாகினர்...
பதறிப்போன நண்பர்கள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், கடலோர காவல் படை வீரர்கள் மீனவர்கள் உதவியுடன் தேடி வந்தனர்.
சுமார் 24 மணி நேரத்தை கடந்து தேடுதல் தொடர்ந்த நிலையில், உடல்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவியது.
இதனால் உடல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட, பிள்ளைகளை காணாது பரிதவித்தனர் பெற்றோர்கள்..
இந்நிலையில், ஞாயிறன்று மாலை 6 மணியளவில், மாமல்லபுரம் அருகேயுள்ள வெண்புருஷம் கடற்கரையில் ரியாஸ் உடலும், உய்யாலி குப்பம் கடற்கரையில் கிரிஷ் கேசவ் உடலும் கரை ஒதுங்கியது...
இருவரது உடலையும் மாமல்லபுரம் போலீசார் கைப்பற்றி பிரோத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளைகள் அழுகிய நிலையில் கிடந்ததை கண்டு அவரது பெற்றோர்கள் கதறி அழுத காட்சி காண்போரையும் கண்கலங்க வைத்தது.