ஸ்மார்ட்டாக ஜீன்ஸ் பேண்ட் ஆர்டர் செய்த IT ஊழியர்.. விலங்கு மாட்டி இழுத்து சென்ற சென்னை போலீஸ்

Update: 2024-11-16 06:52 GMT

கொரியரில் வந்த ஜீன்ஸ் பேண்டில் சிக்கிய மெத்தபெட்டமைன் போதைப்பொருள்.. ஐடி ஊழியர் கையும் களவுமாக சிக்கியது எப்படி? இது குறித்து பார்க்கலாம்..விரிவாக..

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, ராயப்பேட்டையை சேர்ந்த ஐடி ஊழியர் அன்புகிரி என்பவரை போலீசார் கைது செய்தனர்..

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தப்படுவதாக, தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இந்த தகவலின் அடிப்படையில், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் போலீஸ் சோதனை செய்து வந்தனர்.

இதனிடையே, சென்னைக்கு வரும் பார்சல்களில் ஒருவேளை போதைப் பொருள் கடத்தல் நடக்கலாம் என சந்தேகித்த போலீசார், கொரியர் நிறுவனங்களிலும் சோதனை செய்தனர்.. அதன்படி, தனியார் கொரியர் நிறுவனம் ஒன்றில் நடத்திய சோதனையின்போது, சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் என்பவருக்கு பெங்களூருவில் இருந்து ஒரு பார்சல் வந்திருக்கிறது.

அந்த பார்சலில் ராயப்பேட்டையில் இருக்கும் தனது நண்பரும் ஐடி ஊழியருமான அன்புகிரி என்பவருக்காக ஜீன்ஸ் பேண்ட் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கியிருப்பதாகவும் அஸ்வின் கூறியிருக்கிறார்..

ஆரம்பத்தில், ஜீன்ஸ் பேண்டு தானா? எனப் பார்த்த போலீசாருக்கு ஒன்றும் தெரியவில்லை. பின்னர், அந்த ஜீன்ஸ் பேண்டை கையில் எடுத்து ஆய்வு செய்து பார்த்ததில், ஒரு அதிர்ச்சி காத்திருந்தது... ஆன்லைனில் ஆர்டர் செய்து வந்ததாக கூறப்பட்ட அந்த ஜீன்ஸுக்குள்3.5 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கல்வடிவத்தில் இருந்தது தான், அது...

இப்படியாக, கையும் களவுமாக சிக்கிக் கொண்டதை அடுத்து, ஐடி ஊழியர் அன்புகிரியை தனிப்படை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.. அவரிடம் செய்த விசாரணையில், இந்த போதைப் பொருளை தனது நண்பர் மூலம் அறிமுகமாகிய ஹென்றி என்பவர் தந்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்...

இதைதொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த விருகம்பாக்கம் போலீசார், கொரியர் மூலமாக இப்படி போதைப் பொருள் சப்ளை செய்த ஹென்றியை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்