இ-சேவை மையம் ஓனரின் லீலைகள்..லீக்கான ஆடியோ..ஆதாரமான வீடியோ - முகத்திரை கிழிந்ததும் முகம் மூடி ஓட்டம்

Update: 2024-12-23 05:51 GMT

இ-சேவை மையம் ஓனரின் லீலைகள்..லீக்கான ஆடியோ..ஆதாரமான வீடியோ - முகத்திரை கிழிந்ததும் முகத்தை மூடி ஓட்டம்

இ சேவை மையம் என்ற பெயரில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலி பணி நியமன ஆணை வழங்கி கோடிகளை சுருட்டிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் பின்னணியை பார்க்கலாம் விரிவாக...

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஜார் வீதியில், 36 வயதான கார்த்திகா என்ற பெண் இ-சேவை மையம் நடத்தி வருகிறார்.

குறிப்பாக, கிராம மக்களை குறிவைத்த கார்த்திகா, இ சேவை மையத்திற்கு வருவோரிடம் இயல்பாக பேசிப் பழகி நம்ப வைத்து, அரசு வேலை மற்றும் முதியோர் ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்..

தனக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுடன் நல்ல நட்பு உள்ளதாகவும், அதன்மூலம் அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி, ஊர் மக்களை நம்ப வைத்துள்ளார்.

இதனை நம்பிய மக்கள், லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து, பணி நியமன ஆணைக்காக காத்துக் கொண்டிருக்க, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வரும் கடிதத்தைப் போல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் பெயரோடு பணி நியமன ஆணை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் கார்த்திகா கொடுத்த பணி நியமன ஆணையை வைத்து ஒருவர் பணிக்கு சேர சென்றபோது, தனக்கு வந்த கடிதம் பொய்யானது என தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வருவாய்த் துறையினர் நடத்திய விசாரணையில் பல மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பல முதியவர்களிடம் கார்த்திகா உதவித் தொகை வாங்கித் தருவதாக கூறி அதற்கு போலியாக ஏடிஎம் கார்டை தயாரித்து வழங்கியுள்ளார். மேலும் கட்டுமான ஊழியர்களுக்கு கடன் பெற்று தருவதாகவும், கட்டுமான தொழிலாளர் அட்டை பெற்று தருவதாகவும் கூறி பலரிடம் ஆயிரக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதும் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக முறையிட்ட மக்களிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் கார்த்திகா...

பணத்தை கொடுத்தவர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்ப, மிரட்டல் தொனியில் கார்த்திகா பதிலளித்த ஆதாரமும் வெளியாகியுள்ளது...

இதனால் லட்சக்கணக்கான பணத்தை இழந்து தவிக்கும் மக்கள், தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட வருவாய் துறை அதிகாரிகள், கடந்த 10ம் தேதியன்று கார்த்திகாவின் இ-சேவை மையத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்ததோடு அந்த மையத்திற்கு சீல் வைத்தனர்.

இந்த நிலையில் சென்னையில் பதுங்கி இருந்த கார்த்திகாவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, சோளிங்கர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர் நடத்திய இ சேவை மையத்தில் இருந்து கம்ப்யூட்டர், சி.பி.யூ. மற்றும் ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் 4 கோடி ரூபாய் வரை ஏமாற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது...

Tags:    

மேலும் செய்திகள்