முழங்கால் அளவு வெள்ளம்..பெண் சடலத்துடன் சென்ற ஆம்புலன்ஸ்..திக் திக் காட்சிகள்
பர்கூர் மலைப்பகுதியில் பாலம் வசதி இல்லாததால், இளம்பெண்ணின் சடலத்துடன் அம்புலன்ஸ் ஒன்று, பாலாற்றில் ஆபத்தான முறையில் இறங்கி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை பகுதிக்குயில் குட்டையூர் கிராமம் உள்ளது. இங்கு செல்ல வேண்டும் என்றால், கர்நாடக மாநிலத்திற்கு உள்ளே சென்று, அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் தமிழகம் கர்நாடகா இடையே ஓடும் பாலாற்றை கடந்துதான் செல்ல வேண்டும். இங்கு பாலம் அல்லது தரைப்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், அழகி என்ற இளம் பெண் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். அவரது உடலை, பெருந்துறையில் இருந்து, ஆம்புலன்ஸ் மூலம் குட்டையூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, வனப்பகுதியில் பெய்த கனமழையால், குட்டையூர் செல்லும் வழியில் உள்ள பாலாற்றில் முழங்கால் அளவுக்கு காட்டாற்று வெள்ளம் பாய்ந்தது. இதனால், ஆம்புலன்ஸை ஆபத்தான முறையில் ஆற்றில் இறக்கி கொண்டு சென்று உடலை ஒப்படைத்தனர். பாலாற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என குட்டையூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.