தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

Update: 2024-12-29 04:30 GMT

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள நினைவிடத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து இதற்காக சென்னைக்கு வந்துள்ள தொண்டர்களால், சென்னை கோயம்பேடு பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்து போனது.

விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொதுச்செயலாலருமான பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக அலுவலகத்தில் இருந்து பேரணியாக செல்ல அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஏராளமான தேமுதிக தொண்டர்களும், பொதுமக்களும், பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு போலீசாரின் தடையை மீறி பேரணியாக சென்றனர்.

அப்போது, காவல்துறை தடையை மீறி தேமுதிகவினர் நினைவிடம் நோக்கி சென்ற நிலையில், கட்டுக்கடங்காத

கூட்டத்தை காவல்துறையினரால் தடுத்து நிறுத்த முடியாமல் போனது.

விஜயகாந்தின் நினைவிடத்தில் இருந்து ஜோதியுடன் பேரணியாக சென்ற பிரேமலதா விஜயகாந்த் உள்பட எல்.கே.சுதீஷ், விஜயபிரபாகர், சண்முக பாண்டியன் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் என முதல்வர் ஸ்டாலின் விஜயகாந்தை நினைவுகூர்ந்துள்ளார்.

முன்னதாக, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால், காவல்துறை தரப்பில் பேரணிக்கு தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே நேரத்தில், 2 நாட்களுக்கு முன்பே தடை குறித்து கூறியிருந்தால் கூட, நீதிமன்றத்தை அணுகி பேரணிக்கு அனுமதி பெற்றிருப்போம், திட்டமிட்டே நினைவு நாளில் போலீசார் பேரணிக்கு தடை விதித்ததாகவும் தேமுதிக தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

அப்போது, விஜயகாந்தின் குரல் மைக்கில் ஒலிபரப்பப்பட்ட போது, அங்கு இருந்த தொண்டர்களும், ரசிகர்களும் கேப்டன் விஜயகாந்த் என ஆர்ப்பரித்தனர்.

முதலமைச்சரின் பிரதிநிதியாக அமைச்சர் சேகர்பாபு, விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். விஜயகாந்தின் மீது மாறாத பற்றின் காரணமாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை அனுப்பியதாகவும், பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என அமைச்சர் சேகர்பாபு அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்