சிறுவன் வயிற்றில் பாய்ந்த Bullet... மூடி மறைத்த அதிர்ச்சி... திகிலில் திண்டுக்கல்

Update: 2025-01-01 15:39 GMT

Air Gun குண்டு பாய்ந்ததில், 17 வயது சிறுவன் காயம் அடைந்துள்ளார்.. எங்கே நடந்த சம்பவம் இது? பார்க்கலாம்..விரிவாக..

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை மலைப்பகுதி தென்மலையில் உள்ள காபித்தோட்டத்தில் தான், இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. நத்தம் அருகே பெரியமுளையூரை சேர்ந்த சின்னச்சாமி மகன் ரகுபதி. 17 வயதே ஆன இந்த சிறுவன், காபித்தோட்டத்தில் வேலைக்காக தனது தாய், தந்தை உடன் வந்திருந்தார்.

இந்த காபி தோட்டத்தில் சுற்றித் திரியும் குரங்குகளை விரட்டுவதற்காக, தோட்ட உரிமையாளர்கள் ஏர்கன் உள்ளிட்ட துப்பாக்கிகளை வாங்கி வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான், டிசம்பர் 29ஆம் தேதி தோட்டத்தில் இருந்த ஒரு ஏர்கன்னை எடுத்த சிறுவன் ரகுபதி, அதை வைத்து விளையாடியதாக தெரியவருகிறது. அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக ஏர்கன்னில் இருந்து குண்டு சீறிப் பாய்ந்ததில், சிறுவன் ரகுபதியின் வயிற்று பகுதியில் குண்டு பாய்ந்துள்ளது.

இதைத்தொடர்ந்து சிறுவன் கதறி துடிக்கவே, அங்கு இருந்த சக தொழிலாளர்களும், பெற்றோர்களும் இணைந்து சிறுவனை மீட்டு போலீசாருக்கு தெரியாமல், ரகுபதியை திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக, எந்த தகவலும் வெளியே வராத நிலையில், சிறுவனின் வயிற்றில் பாய்ந்த ஏர்கன் குண்டை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

சத்தமே இல்லாமல் நடந்தேறிய இந்த சம்பவம் குறித்து ஒரு வழியாக அறிந்து கொண்ட திண்டுக்கல் தாலுகா போலீசார், இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காபித்தோட்டத்தில் ஏர்கன்னை அஜாக்கிரதையாக வைத்திருந்த நிலையில், சிறுவனுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தாலும், இதை இப்படித்தான் மூடி மறைத்து இருப்பார்களா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்