கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் நாளை இறக்கும் விமானப்படை.. களைகட்டும் சென்னை மெரினா கடற்கரை
சென்னை மெரினா கடற்கரையில், நாளை நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சியை காண, சுமார் 3 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
92-வது ஆண்டு விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில், நாளை காலை 11 மணி முதல் 1 மணி வரை விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துகொள்கிறார்.
72 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய வகை ஜெட் விமானங்கள் பங்கேற்பதுடன், ஹெலிகாப்டர் மற்றும் பாராசூட்டில் இறங்கி வீரர்கள் சாகசம் செய்ய உள்ளனர்.
விமான சாகச நிகழ்ச்சியைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக கட்டுப்பாட்டு அறை, மருத்துவக்குழு, 5 தீயணைப்பு வாகனங்கள், குடிநீர்த் தொட்டிகள், 23 கூடாரங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வான் சாகசம் நிகழ்த்தும் பகுதியில் சவுக்கு கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த 13 இடங்களில் வாகன நிறுத்தும் வசதி அமைக்கப்பட்டுள்ளது.