சென்னையில் இப்படி ஒரு சம்பவமா..! நள்ளிரவில் வீடுகளை இடித்த கும்பல்... நடுரோட்டில் தியாகி குடும்பம்

Update: 2024-11-07 16:12 GMT

சென்னை வடபழனி 100 அடி சாலை அருகே, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நள்ளிரவில் ஜேசிபி கொண்டு குடியிருப்புகளை இடித்ததால், நிர்கதியாய் நிற்கும் சூழல் நிலவியது. என்ன நடந்தது ? பார்க்கலாம் விரிவாக...

சென்னை வடபழனி 100 அடி சாலை பகுதியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நகர் தெருவில் உள்ள காலனியில் கடந்த 40 ஆண்டுகளாக பத்து வீடுகள் கொண்ட குடியிருப்பு ஒன்றில், எட்டு குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றனர்.

இதில் சுதந்திர போராட்ட வீரரான ஜோதி கண்ணன் என்ற முதியவரும் வசித்து வருகிறார்...

இந்நிலையில் மழை காரணமாக, அக்குடியிருப்பில் வசித்து வந்த மக்கள், பாதுகாப்புக்காக வேறு பகுதிக்கு சென்று தங்கியிருந்தனர்.

இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தனியாருக்கு சொந்தமான கட்டிட நிறுவனம் ஒன்று, குடியிருப்பை ஜேசிபி இயந்திரத்தை கொண்டு இடிக்க முற்பட்டுள்ளது...

தகவலறிந்த குடியிருப்புவாசிகள், எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் வீடுகளை இடிக்க அனுமதி கொடுத்தது யார் எனக் கேள்வி எழுப்பி போராட்டத்தில் குதித்தனர்.

அத்துடன் காவல்துறையிலும் புகாரளித்த நிலையில், போலி ஆவணங்களை வைத்து குடியிருப்பை இடித்ததாக தெரிவிக்கின்றனர்.


இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில்,

40 ஆண்டுக்கு முன்னர் மறைந்த வேதகிரி என்ற நபர் தாங்கள் தற்போது குடியிருக்க கூடிய பகுதியை அரசுக்கு, கால்வாய் வழி தடத்திற்காக எழுதிக் கொடுத்ததாகவும், பின்னர் வழக்குத் தொடர்ந்து அதில் வென்று அரசு அனுமதியுடன் தற்போது வசித்து வந்ததாகவும் கூறுகின்றனர்.

இதற்கிடையில் தான் போலி பத்திரத்தை வைத்துக் கொண்டு இந்த இடத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக கூறும் குடியிருப்புவாசிகள், போலீசில் புகாரளித்தும் எவ்வித பயனும் இல்லை என கூறுகின்றனர்.


இந்த சம்பவத்தில் அரசு உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்