சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளி வாயு கசிவு விவகாரம், மாணவர்கள் நடத்திய நாடகம் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்ட விவகாரம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தியது. பள்ளியின் அருகே உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.வெளியில் இருந்து வாயு கசிவு ஏற்படுவதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை என்பது விசாரணையில் உறுதியானது. வாயு கசிவு விவகாரம் மாணவர்கள் திட்டமிட்டு நடத்திய நாடகமாக இருக்கலாம் என காவல்துறை தரப்பு தகவல் கூறியுள்ளது. மர்ம பொருளை எடுத்து வந்து அதன் மூலம் மயக்கம் ஏற்படுவதற்கான பணிகளை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதையடுத்து, பள்ளி வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வருகிற 13ஆம் தேதி புதன்கிழமை கட்டாயம் பள்ளி திறக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாயு கசிவு விவகாரம் தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை ஆய்வறிக்கையும் பள்ளிகல்வித்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.