பல்செட்டை விழுங்கி துடியாய் துடித்த பாட்டி - துணிந்து உயிரை காத்த ராஜீவ் காந்தி மருத்துவர்கள்

Update: 2024-03-24 10:05 GMT

பல்செட்டை விழுங்கி துடியாய் துடித்த பாட்டி 92 வயதா...? கைவிரித்த பிரபல ஹாஸ்பிடல் - துணிந்து உயிரை காத்த ராஜீவ் காந்தி மருத்துவர்கள்

92 வயதான மூதாட்டியின் உணவுக்குழலில் பல்செட் சிக்கிய நிலையில், நம் அரசு மருத்துவர்கள் போராடி அவரது உயிரை மீட்டுள்ளனர்... அது குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு தொகுப்பு....

இந்திய அளவில், மருத்துவக் கட்டமைப்பில் சிறந்த மாநிலம் தமிழகம் என்பது பல்வேறு கால கட்டங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதற்கு முழுமுதற் காரணமாக இருந்தது நம் மருத்துவர்களின் திறமைதான். அதற்கு சான்றாக, மற்றொரு சம்பவம் ஒன்று ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது...

மருத்துவமனை படுக்கையில் துவண்டு போய் படுத்திருக்கும் இந்த மூதாட்டியின் பெயர்தான் ரஷியா பேகம்... 92 வயதை கடந்த ரஷியா பேகம் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர்.

ரமலான் நோன்பை முடித்துவிட்டு நோன்பு கஞ்சி குடித்த போது தான் அணிந்திருந்த பல் செட்டையும் சேர்த்து விழுங்கிவிட்டார் ரஷியா பேகம்.முதலில் உணவுப்பாதையை அடைத்த பல்செட், பின்னர் உணவுகுழாயை கொக்கி போல அடைத்துக் கொண்டது.

வலி பொறுக்க முடியாமல் துடித்துப்போனார் ரஷியா பேகம். எச்சில் கூட விழுங்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமானது. குடும்பத்தினர் மூதாட்டி வலி பொறுக்க முடியாமல் தவிப்பதை பார்த்து கண்ணீர் சிந்தினர்.

என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தவர்கள், அதிநவீன வசதிகள் அடங்கிய பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு மூதாட்டியை அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்களோ, ரஷியா பேகத்தை காப்பாற்ற முடியாது என கைவிரித்து விட்டனர். உடனடியாக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ரஷியா பேகம்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டிக்கு ஏற்கனவே, இரத்த அணுக்கள் குறைவாக இருந்தது... ரத்த கொதிப்பு நோயும் இருந்தது. உடலும் பலவீனமாக இருந்த நிலையில், உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ரஷியா பேகத்தை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற முடிவோடு, பல்செட்டை எப்படி எடுப்பது என யோசித்தது மருத்துவர் குழு. பின்னர் உள்நோக்கி கருவியை பயன்படுத்த முடிவு செய்து, உணவுக்குழலில் சிக்கியிருந்த பல் செட்டை எடுத்தனர்.

இதில் சிக்கல் என்னவென்றால் பாட்டிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதை தடுக்க ஆக்ஜிசன் குழலை பொருத்தமுடியாத சூழல் நிலவியது. சிகிச்சை உடல் வலியையும் அவருக்கு தந்தது. இதற்கு இடையில்தான் புத்திசாலித்தனமாக இயங்கி, பல்செட்டை அகற்றியது மருத்துவர் குழு.

மருத்துவர் பாரதி மோகன் கூறுகையில் இது போன்ற தருணங்களில் பாதிக்கப்பட்டவர்களை தைரியப்படுத்தி உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்ல வேண்டும். நேரம் ஆக ஆக, நம்பிக்கை குறைவும் பாதிப்பும் அதிகரித்துக் கொண்டே செல்லும் என குறிப்பிட்டார். அரசு மருத்துவர்களின் துணிச்சலும், புத்திசாலித்தனமும் தற்போது அனைவராலும் பாரட்டப்பட்டு வருகின்றது.

Tags:    

மேலும் செய்திகள்