சென்னை எழும்பூரில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட மூன்று கென்யா நாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எழும்பூரில் மதுபான விடுதி ஒன்றில், தகராறு நடப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கென்ய நாட்டை சேர்ந்த 3 பெண்கள், மது போதையில் பாரில் தகராறில் ஈடுபட்டு, சாலையில் வரும் மக்களை ஆபாச வார்த்தையில் திட்டி போக்குவரத்துக்கு இடையூறு செய்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனிடையே, அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பார் செயல்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, பார் ஊழியர்கள் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து, பார் உரிமையாளர்கள், மேனேஜர் பவுன்சர் என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மேனேஜர் மற்றும் பவுன்சரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கென்ய பெண்கள், விஜினியா, அனஸ்தடியா, போசியா மூவண்டை என்பதும், மருத்துவ காரணங்களுக்காக 2 மாதம் முன்பு சென்னை வந்ததும் தெரிய வந்தது. உண்மையில் மருத்துவ காரணங்களுக்காக அவர்கள் வந்தனரா? அல்லது வேறு காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.