தமிழகத்துக்குள் நுழைந்த அடுத்த அரக்கன்... அதிவேகமாக பரவும் நோய் - இந்த அறிகுறிகள் இருக்கா..?
தமிழகத்தில் வாட்டும் குளிருக்கு மத்தியில் அழையா விருந்தாளியாக வந்துள்ள வாக்கிங் நிமோனியா குறித்து விளக்குகிறது. இந்த செய்தி தொகுப்பு..
தமிழகத்தில் மழையின் தீவிரம் குறைந்து பல்வேறு மாவட்டங்களில் கடும் குளிர் நிலைக்கு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளியால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பிக் காணப்படுகிறது. இதனிடையே வாக்கிங் நிமோனியா என்ற ஒரு நோயும் வேகமாக பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல், உடற்சோர்வு ஆகியவற்றை அறிகுறிகளாக கொண்ட, குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நிமோனியா வகை காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த குறைந்த வகை நிமோனியா காய்ச்சலுக்கு மருத்துவ உலகத்தினர் வாக்கிங் நிமோனியா என்றும் அழைக்கின்றனர்.
தற்போது வேகமாக பரவும் இந்த வகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற வேண்டியது இல்லை. வழக்கமான நிமோனியாவை விட வெவ்வேறு பாக்டீரியாக்களால் ஏற்படும், நுரையீரல் தொற்றாகவே இது மனித உடலில் நோய் பாதிப்பை கடத்தும் தன்மையை கொண்டிருக்கும் என்கிறார்கள், மருத்துவர்கள்.
பெரும்பாலும் குழந்தைகள் அல்லது இளம் வயதினர் மற்றும் நெருக்கமான இடங்களில் வசிப்பவர்களுக்கு எளிதில் நோய் பரவும் தன்மையை இது கொண்டிருப்பதாகவும், மைக்கோபிளாஸ்மா நிமோனியா, கிளமிடியா நிமோனியா மற்றும் லெஜியோனெல்லா வகை பாக்டீரியாக்களால் காய்ச்சலாக பரவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்..
பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் காற்றின் மூலம் வேகமாக பரவும் தன்மை இந்த நோய்க்கு இருப்பதால் நோய் பரவலை தடுக்க முகக்கவசம் அணிவது நல்லது எனவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
5 முதல் 17 வயதினருக்குள் இருப்பவர்கள் சமகாலத்தில் பெருமளவில் இந்த நோயால் பாதிக்கப்படுவதாகவும் , குறைவான நிமோனியா பாதிப்பு நோய் என்பதால் உரிய சிகிச்சை எடுக்க தவறும் பட்சத்தில் நுரையீரல் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை தெரிவிக்கின்றனர்.
சாதாரண ஃப்ளூ காய்ச்சல் கூட இதற்கான அறிகுறிகளாக இருப்பதால் காய்ச்சல் தொடர்பாக மருத்துவரை அணுகுவது அவசியம்..
எது எப்படியோ, மாறி மாறி வரும் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப, கிளம்பி வரும் எந்த நோயாக இருந்தாலும் நாமெல்லாம் முன்னெச்சரிக்கை உடன் இருந்தாலே போதும், நம்மிடம் வருவதற்குள் எந்த நிமோனியா வந்தாலும் ஓட்டம் பிடிக்கும் என்பதே உண்மை.