வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் அழைத்து உதவிகளை வழங்கிய த.வெ.க தலைவர் விஜயின் நிவாரணப் பணி சர்ச்சையாக்கியிருப்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...
மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மக்களை நேரடியாக சந்தித்து, உதவிகளை வழங்கி உங்களோடு நாங்க இருக்கோம் என அரசியல் தலைவர்கள் ஆறுதல் கூறுவது வழக்கமான ஒன்று... இப்படி பேரிடர் வெள்ளத்தை கண்ட காலங்களில் வேஷ்டியை மடித்துக் கொண்டு களத்தில் பம்பரமாக சுழன்ற தலைவர்களையும் தமிழகம் பார்த்து உள்ளது.
1978-ல் ஊட்டி பெரும் வெள்ளத்தை கண்டது. அப்போது அங்கு வீடு வீடாக சென்று உதவிப் பொருட்களை வழங்கிய எம்.ஜி.ஆர்., மக்களுக்கு ஆறுதல் கூறினார். 1985 ஆம் ஆண்டு சென்னை பெரும் வெள்ளத்தை கண்டது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். வீட்டையும் வெள்ளம் சூழ்ந்தது.
ராமாபுரம் தோட்ட வீட்டிலிருந்து அவரே படகில் வெளியேற நேரிட்டது. அப்போது முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் வெள்ள காலங்களில் களத்தில் வேஷ்டியை மடித்துக் கட்டி இறங்கி உதவியவர். 2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போதும் மக்களை சந்திப்பதை தவிர்க்கவில்லை கருணாநிதி...
அதேபோல் ஜெயலலிதாவும் மழை, வெள்ள பேரிடர் காலங்களில் மக்களை நேரடியாகவே சந்தித்து உதவிகளையும், நிவாரணப் பொருட்களையும் வழங்கியவர்.
முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் மழை வெள்ள காலங்களில் தண்ணீரில் இறங்கி மக்களின் துயரங்களை கேட்டு.. உதவிப் பொருட்களை வழங்குவதை வழக்கமாக கொண்டவர். இப்போதும் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி...
முதலமைச்சர் ஸ்டாலின் கொட்டும் மழையிலும் களத்தில் இறங்கி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை செய்பவர்... பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் இடத்திற்கே சென்று தனது கரங்களால் உணவு... உதவி பொருட்களை வழங்குபவர். அவரது மகனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் அதே பாணியில் களத்தில் சென்று பணியாற்றுகிறார்.
இந்த வகையில் மறைந்த தேமுதிக தலைவர் விஜய்காந்த் தனி... உதவி என வந்தவர்களுக்கு உணவு முதல் அனைத்து உதவிகளையும் செய்வதோடு, எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் எவ்வளவு தண்ணீர் இருந்தாலும் அங்கு சென்று உதவிகளை செய்பவர் விஜய்காந்த்... சென்னை... கடலூர்... தூத்துக்குடி என எந்த பகுதியாக இருந்தாலும் முதல் ஆளாக ஆஜர் ஆவார்... அவரது மனைவி பிரேமலதாவும் அவரது வழியில் பயணிப்பவரே...
பாமக தலைவர் அன்புமணி ராமதாசும் களத்தில் இறங்கி உதவிப் பணிகளை செய்வதை முதன்மையாக கொண்டவர். விசிக தலைவர் திருமாவளவன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் களத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு உதவிப்பொருட்களை வழங்குபவர்கள்...
இப்போது வடமாவட்டங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறது... இந்த சூழலில் புதிதாக அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், டிபி சத்திரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தனது கட்சி அலுவலகத்திற்கு அழைத்து உதவிகளை வழங்கியிருக்கிறார்.
அரசியல் கட்சிகள் எல்லாம் களத்தில் பணியாற்ற... விஜய் மட்டும் பாதிக்கப்பட்டவர்களை பஸ்சில் அழைத்து வந்து உதவிகளை வழங்கியது இணையத்தில் பெரும விவாதப் பொருளாகியிருக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்களை அவர்களுடைய இருப்பிடத்துக்கு சென்று நேரடியாக பொருட்களை வழங்கி ஆறுதல் கூறுவதே சரியென ஒருதாரர் விஜய் செயலை இணையத்தில் விமர்சிக்க தொடங்கி விட்டார்கள். ஆனால்... விஜய் ஏன் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வரவில்லை என்பதை அவரிடம் உதவிப் பொருட்களை பெற்றவர்களே விவரித்தார்கள்...
உங்க இடத்திற்கே வந்து உதவிப்பொருட்கள் கொடுக்க முடியல என்று விஜய் மன்னிப்பு கேட்டதாக குறிப்பிட்டனர். மீட்பு பணியின் போது விஜய் வந்தால்... மக்கள் கூட்டம் கூடும் தேவையில்லாத சிரமங்கள் ஏற்படும் என்பதாலே அவர் மக்களை நேரடியாக அழைத்து உதவியதாக அவருக்கு ஒருசாரர் ஆதரவு தெரிவிக்கிறார்கள்...
மறுபுறம் எப்படியானாலும் வாக்கு கேட்டு மக்களை சந்தித்துதானே ஆக வேண்டும் என கேள்வி எழும்ப, நெல்லை.. தூத்துக்குடியில் விஜய் நேரில் சென்று உதவியதை யாரும் மறந்துவிட வேண்டாம் என அவரது ஆதரவாளர்கள் வாதிட்டு வருகிறார்கள்...
மழை வெள்ள விவகாரத்தில் ஆளும் கட்சிக்கும் அரசியல் கட்சிக்கும் இடையான வார்த்தை போருக்கு மத்தியில் விஜய் நிவாரணப் பணியும் புது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.