``தமிழ்நாட்டையும், மக்களையும் கொச்சைப்படுத்துவது தான் ஆணவம்..''ஆளுநர் மீது முரசொலி விமர்சனம்
தமிழ்நாட்டையும், கோடிக்கணக்கான மக்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் தினந்தோறும் செயல்படுவதுதான் ஆணவம் என, தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முரசொலி நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரையில், அரசியலமைப்புச் சட்டப்படி நடந்து கொள்ளாதவர் மட்டுமல்ல... சட்டத்தை மீறியே செயல்படுபவர் தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை, தி.மு.க. அரசை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதைப் போல திசைதிருப்பும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் உள்பட அனைவரும் தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை வழங்கித்தான் வருகிறார்கள். பேச வந்து, பேசாமல் போனதைத்தான் சிறுபிள்ளைத்தனமானது என்றார் முதலமைச்சர். தேசியகீதம் பாடச் சொல்வதை சிறுபிள்ளைத்தனம் என்று சொல்லவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
யாரோ ஒருவரின் தயவால் ஆளுநராகி வந்து
தமிழ்நாட்டையும், தமிழையும், தமிழ்நாடு
சட்டமன்றத்தையும், கோடிக்கணக்கான மக்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் தினந்தோறும்
செயல்படுவதுதான் ஆணவம் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு இணையாக அல்லது அவரை விட மேலாக நினைத்துக் கொள்வது ஆணவத்தை விட தான்தோன்றித்தனம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.