``திறந்த 90 நாளில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்'' - திறந்து வைத்த அமைச்சர் சொன்ன காரணம்
திமுக ஆட்சியில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலங்கள் வலுவாக இருப்பதில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, திமுக அரசால் 16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலம், 90 நாட்களிலேயே மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இனி கட்டப்படும் பாலங்களையாவது தரமான பாலங்களாக கட்டுமாறு, எடப்பாடி பழனிசாமி திமுக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சராக, நெடுஞ்சாலைத் துறையையும் பொறுப்பில் வைத்திருந்த ஈபிஎஸுக்கு இந்த ஆட்சியினை குறை கூற எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு கண்டனம் தெரிவித்துள்ளார்...
திமுக ஆட்சியில் கட்டிய பாலங்கள் எவ்வளவு தரமற்றவை என்பதற்கு அடித்துச் செல்லப்பட்ட பாலங்கள் சாட்சி என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருந்தார்...
அதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் வேலு, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆயிரத்து 505 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளதாகவும், 328 பால பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர்,
ஈபிஎஸ் ஆட்சியில் முடிக்காமல் விட்டுச் சென்ற, 38 ரயில்வே மேம்பாலங்கள் திமுக ஆட்சியில் தான் கட்டி முடிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்...
ஈபிஎஸ் ஆட்சியில் கட்டிய உடனேயே 7 பாலங்கள் இடிந்து விழுந்ததாகவும், கட்டும் போதேவும் இடிந்து விழுந்த பாலங்கள், தடுப்பணை உண்டு என்று சாடியுள்ள அமைச்சர் வேலு,
ஃபெஞ்சல் புயலால் வரலாறு காணாத அதீத கனமழை பெய்து அதிகப்படியான வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் அகரம்பள்ளிப்பட்டு பாலம் பெரும் சேதமடைந்ததாக தெரிவித்தார்...
இந்த பாலத்தின் நீர் வெளியேற்றும் திறன் வினாடிக்கு 54 ஆயிரம் கன அடி தான் என்றும், எதிர்பாராத பேரிடர் காரணமாக அதிக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பாலம் உடைபட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்...
திமுக ஆட்சியில் சாலைகள், பாலங்கள் தரம் வாய்ந்தவையாக கட்டப்பட்டு வருகிறது என்றும், ஒவ்வொரு நிலையிலும் தரக்கட்டுபாடு பொறியாளர்கள் தரத்தினை சோதிக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்...
மேலும், முதலமைச்சராக, நெடுஞ்சாலைத் துறையையும் பொறுப்பில் வைத்திருந்த ஈபிஎஸிற்கு இந்த ஆட்சியினை குறை கூற எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என்றும் சாடியுள்ளார்...