தமிழகமே ஸ்தம்பித்துப்போன ஒரு கைது செ.பாலாஜியின் 365 நாட்கள் சிறை வாழ்வு இன்றும் கண் அசைவில் இயங்கும் கரூர் சிறை சந்திப்பும்... சிதம்பர ரகசியமும்

Update: 2024-06-14 05:11 GMT

தமிழக அரசியலை ஸ்தம்பிக்க செய்த சம்பவம் அரங்கேறி ஒரு வருடம் கடந்தோடி இருக்கிறது. என்ன சம்பவம் அது ?... பார்க்கலாம் விரிவாக...

ஒட்டுமொத்த இந்திய அரசியலும் தமிழக அரசியலை கண் குத்திப் பாம்பாய் உற்று நோக்கிக் கொண்டிருந்த தருணம்...

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத மற்றும் முக்கிய புள்ளியாய் திகழ்ந்த அப்போதையை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை வீடு புகுந்து கைது செய்த நாள்...

நள்ளிரவில் கைது, நெஞ்சுவலிப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதி... பைபாஸ் சர்ஜரி என கடந்தாண்டு ஜூன் மாதம் தமிழக அரசியலே செந்தில் பாலாஜியால் ஸ்தம்பித்து போயிருந்தது ...

இந்த சம்பவம் அரங்கேறி ஒரு வருடம் கடந்தோடி இருக்கிறது...

சட்டவிரோத பணப் பரிமாற்றத்தால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி... அமைச்சர் பதவியை இழந்து, கரூர் எம்.எல்.ஏ-வாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்...

சுமார் 38 முறைக்கும் மேலாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு சென்னை புழலின் 2ஆவது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் செந்தில் பாலாஜி...

விசாரணை நீதிமன்றம்... உயர்நீதிமன்றம்... உச்ச நீதிமன்றம் என்ற மூன்று நீதிமன்றத்தின் கதவுகளை எண்ணற்ற முறை அவர் தட்டியும், கதவுகள் திறந்தபாடில்லை...

இந்நிலையில், அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரின் கண் அசைவுகளுக்கு கட்டுப்பட்டு இருந்த கரூர் மாவட்டமும், அங்குள்ள கரை வேட்டிகளும்... தற்போது வரை செந்தில் பாலாஜியின் கண் அசைவுகளுக்கு கட்டுபட்டும், விஸ்வாசமாகவும் இருக்கிறார்களாம்...

ஒரு வருட காலமாக சிறைக்குள் இருந்தாலும், கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜி உருவாக்கிய அரசியல் கட்டமைப்பை மாற்ற ஒருவர் கூட முன் வரவில்லையாம்.

இந்நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கரூர் தொகுதியில் களம் கண்ட காங்கிரஸ்.. ஒரு லட்சத்து 70ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது... இந்த வெற்றியில் செந்தில் பாலாஜியின் ஆதாரவாளர்கள் முக்கிய பங்காற்றியதாகவும் சொல்லப்படுகிறது... இதிலிருந்தே செந்தில் பாலாஜியின் அரசியல் பலமும், ஆதிக்கமும் தெள்ளத் தெளிவாகிறது...

கரூரில் நடக்கும் எந்தவொரு சுப காரியங்களும், துக்க சடங்குகளும் செந்தில் பாலாஜியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும், சில நிகழ்ச்சிகளுக்கு செந்தில் பாலாஜியின் பெயரில் நன்கொடை தரப்படும் எனவும் பகுதிவாசிகள் கூறுவது ஆச்சர்யத்தின் உச்சம்... இதில், செந்தில் பாலாஜியின் முகமில்லா கட் அவுட்டுகளை பார்க்கவே முடியாது என்றும் சொல்கின்றனர்...

3 முறை அமைச்சர், கடந்த 25 ஆண்டு கால அரசியல் செல்வாக்கு என செந்தில் பாலாஜி கொடி கட்டி பறந்தபோதிலும், அவரது தந்தை எப்பவும் போல சைக்கிளில் பால் ஊற்றிக் கொண்டு தன் தொழிலையே செய்து வந்ததாக சிலாகிக்கவும் செய்கின்றனர்...

மேலும், கரூர் மாவட்டத்தில் கொடிகட்டி பறந்து வந்த ரியல் எஸ்டேட் தொழில், கடந்த ஒரு வருடமாக அரைக்கம்பத்தில் பறந்து வருவதாகவும் கூறப்படுகிறது...

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் வலது கரமாக செயல்பட்டு வந்த அவரது உடன் பிறப்பான அசோக்... தொடர்ந்து ஒரு வருடமாக தலைமறைவாக இருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது...

இதனிடையே, சிறைக்குள் இருக்கும் செந்தில் பாலாஜியை சந்திக்க வருபவர்களும்... அவர்கள் விவாதிக்கும் அரசியல்களும் சிதம்பர ரகசியம் போல் காக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது...

அதே சமயம்... செந்தில் பாலாஜி விசாரணைக் கைதியாகத்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்... இதனால் கைதிகளுக்கு கொடுக்கப்படும் சீருடைகளும், கைதிகளுக்கு ஒதுக்கப்படும் சிறை வேலைகளும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது...

எந்நேரமும் அரசியல் பணி... சுற்றி நூற்றுக்கணக்கான கட்சி தொண்டர்கள்... பவுர் புல்லான அமைச்சர் அதிகாரம் என தமிழகத்தில் கெத்தாக வலம் வந்த செந்தில் பாலாஜி.. இத்தனையும் இழந்து சிறைக்குள் தனிமரமாக இருப்பது அவருக்கு ஒருவித மன அழுத்தத்தை தருவதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனர்...

இதனிடையே, செய்தித்தாள்கள் மூலம் நாட்டின் அரசியல் விவகாரங்களை செந்தில் பாலாஜி தொடர்ந்து கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது...

இந்நிலையில், தனது தொடர் சட்டப்போராட்டம் மூலம் மீண்டும் தன் அதிகாரத்தை பிடிப்பாரா செந்தில் பாலாஜி ?என்பதற்கு வரும் நாட்களே பதில்....

Tags:    

மேலும் செய்திகள்