உ.பி-க்கு ரூ.25,495 கோடி, பீகாருக்கு- ரூ.14,295 கோடி, தமிழகத்திற்கு ரூ.5,797 கோடி... மத்திய அரசின் வரி பகிர்வு
மத்திய அரசின் வரிகளில் இருந்து மாநிலங்களின் பங்காக 1.42 லட்சம் கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
15ஆம் நிதிக் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசின் வரி வருவாயில், 41 சதவீத தொகை, மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை, மாநில உள்நாட்டு உற்பத்தி அளவு உள்ளிட்ட பல்வேறு அமசங்களின் அடிப்படையில், 15ஆம் நிதிக் குழுவின் ஃபார்முலாவின் படி மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 14 தவணைகளாக இந்த தொகை, மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. 2024ல் இரண்டு மற்றும் மூன்றாம் தவணைகளாக மொத்தம் 1.42 லட்சம் கோடி ரூபாய் தொகை, வியாழன் அன்று பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 12 அன்று முதல் தவணையாக 72,961 கோடி ரூபாய் தொகையை மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்தது. தற்போது அளிக்கப்பட்டுள்ள தொகுப்பில், உத்தர பிரதேசத்திற்கு அதிகபட்சமாக 25,495 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. பீகாருக்கு 14,295 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்திற்கு 11,157 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்திற்கு 10,692 கோடி ரூபாயும் பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளன. அதேநேரம், தமிழகத்திற்கு 5,797 கோடி ரூபாய் அளிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிதிக்குழு ஃபார்முலாவின் படி, தமிழகத்தை விட உத்தர பிரதேசத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2022-23ல், உத்தர பிரதேசத்திற்கு 1.69 லட்சம் கோடி ரூபாயும், பீகாருக்கு 95,509 கோடி ரூபாயும், தமிழகத்திற்கு 38,731 கோடி ரூபாயும், கர்நாடகாவிற்கு 34,596 கோடி ரூபாயும் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.