லதா ரஜினிகாந்த் எதிரான வழக்கு - உச்ச நீதிமன்றம் உத்தரவு
லதா ரஜினிகாந்த்துக்கு எதிரான மோசடி வழக்கை மீண்டும் விசாரிக்க பெங்களூரு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது...
மோசடி வழக்கிலிருந்து விடுவிக்க கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து கொள்ளவும் லதா ரஜினிகாந்த்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது
விசாரணை நீதிமன்றம் கேட்கும் பட்சத்தில் லதா ரஜினிகாந்த் ஆஜராக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது...
நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' திரைப்படத்தை தயாரிப்பதற்காக தனியார் விளம்பர நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர் மற்றொரு விளம்பர நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹாவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்ததாவும், இதற்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையொப்பம் இட்டிருந்ததாவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் முரளி கடனாக பெற்ற பணத்தை அபிர்சந்த் நஹாருக்கு கொடுக்கவில்லை. இதனால் அபிர்சந்த் நஹார், தனியார் நிறுவனத்தின் முரளி மற்றும் லதா ரஜினிகாந்த் மீது கடந்த 2015-ம் ஆண்டு பெங்களூரு மாநகர 6-வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இவ்வழக்கை விசாரித்த அல்சூர் கேட் போலீஸார் லதா ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 196 (போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது), 199 (தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது), 420 (மோசடி செய்து ஏமாற்ற முயற்சித்தது), 463 (ஆதாரங்களை திரித்து தாக்கல் செய்தது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் லதா ரஜினிகாந்த் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, ''குற்றப்பத்திரிகையில் லதா ரஜினிகாந்த் மீது தெரிவிக்கப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டம் 196, 199, 420 ஆகிய பிரிவுகளுக்கு உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.
எனவே அவர் மீதான வழக்கில் இருந்து 3 பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன. அதேநேரத்தில் அவர் மீதான இந்திய தண்டனை சட்டம் 463 (ஆதாரங்களை திரித்து தாக்கல் செய்தது) ஆகிய பிரிவு குறித்து கீழ் நீதிமன்றம் விசாரணை நடத்தலாம்''என கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், லதா ரஜினிகாந்த் எதிரான மோசடி வழக்கை மீண்டும் விசாரிக்க பெங்களூரு நீதிமன்றத்திற்கு அனுமதி அளித்துள்ளதுடன், மோசடி வழக்கிலிருந்து விடுவிக்க கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து கொள்ளவும் லதா ரஜினிகாந்த்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. விசாரணை நீதிமன்றம் கேட்கும் பட்சத்தில் லதா ரஜினிகாந்த் ஆஜராக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது