சிலந்தி வலையில் நித்யானந்தா.. மாய போகும் மாய தேசம்.. வேட்டையாடும் சர்வதேச போலீஸ்
கைலாசாவில் இருந்து சாமியார் நித்தியானந்தாவை கைது செய்து கொண்டு வர, கர்நாடக போலீசாரிடம் சர்வதேச போலீசார் ஆலோசனை நடத்தியுள்ளனர். அதனை விரிவாக பார்ப்போம்...
திருவண்ணாமலையில் ஆரம்பித்த நித்தியானந்தாவின் பயணம் இப்போது கைலாசா எனும் தனி நாடு வரை பயணித்து வருகிறது.
திருவண்ணாமலையிலே பிறந்து குட்டி சாமியாராக மாறி, ஒரு கட்டத்தில் கொடி கட்டிப் பறக்கும் சாமியாராக வலம் வந்த நித்தியானந்தா, நாட்டின் பல பகுதிகளில் ஆசிரமங்களை அமைத்து, தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி இருந்தார்.
நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானதில் இருந்து, நித்தியானந்தாவுக்கு சிக்கல்கள் சிலந்தி வலை போல் பின்ன ஆரம்பித்தன.
புற்றீசல் போல பாலியல் புகார்களும் ஒன்றன்பின் ஒன்றாக எழ, நித்தியானந்தா தலைமறைவானார். தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நித்தியானந்தா, ஒரு கட்டத்தில் நாட்டை விட்டே வெளியேறினார்.
அதன் பிறகு, திடீரென ஏதோ ஒரு தீவை விலைக்கு வாங்கி, 'கைலாசா' எனும் புதிய நாட்டை உருவாக்கி விட்டதாகவும், அதன் அதிபராக முடிசூட்டிக் கொண்டதாகவும் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டு, மீண்டும் ஹைலைட் ஆனார் நித்தி...
மாயை நாடான கைலாசாவை உருவாக்கி, அதனை வைத்து நித்தியானந்தா செய்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் நினைவை விட்டு நீங்காதவையாக இருந்து வருகிறது...
ஆனாலும், பாலியல் புகார் தொடர்பாக, இன்று வரை அவர் தேடப்படும் நபராக இருந்து வருவதால், சட்டம் தனது கடமையை செய்து கொண்டுதான் இருப்பதாக தற்போது போலீசார், தங்களது நடவடிக்கை மூலம் நினைவுபடுத்தியுள்ளனர்.
நித்யானந்தா மீதான பாலியல் வழக்கு ராம் நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியும் நித்தியானந்தா ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
வெளிநாடு தப்பியோடிய நித்தியானந்தாவை பிடிக்க, ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகியும், தற்போது வரை நித்யானந்தாவை பிடிக்க முடியாததால், சர்வதேச போலீசாரின் உதவியை நாடியது கர்நாடகா போலீஸ்....
ஏற்கனவே, கர்நாடகா போலீசாரிடம் ஏராளமான தகவல்களை சர்வதேச போலீசார் பெற்று விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நித்தியானந்தாவை கைலாசாவில் இருந்து தூக்குவதற்கு கூடுதல் ஆவணங்கள் தேவை என்பதால், மீண்டும் கர்நாடகா போலீசை சர்வதேச போலீஸ் தரப்பு தொடர்பு கொண்டு விவரங்களை சேகரித்துள்ளது. இதனால் நித்தி விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.