கழுகுபோல் காத்திருந்த 2 பெண்கள் பெற்றோர் இல்லா நேரம் பார்த்து பெண் பிள்ளைகளை தூக்கிய அதிர்ச்சி
கேரளாவை தொற்றிய உடல் உறுப்பு கடத்தல் விவகாரத்தின் பரபரப்பே சற்றும் தணியாத நிலையில், தற்போது கேரளாவை சேர்ந்த மூவரால் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் நடந்த சம்பவம் பகீர் கிளப்பி இருக்கிறது... பார்க்கலாம் விரிவாக...
இயக்குநர் ராஜமெளலியின் டிரிபிள் ஆர் பட பாணியிலான சம்பவம் ஒன்று அரங்கேறி நீலகிரி மாவட்டத்தை அதிர வைத்திருக்கிறது....
டிரிபிள் ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் சகோதரியை ஆங்கிலேய பெண்மணி ஒருவர் தன் வீட்டு வேலைக்காக கடத்திச் செல்வதை போல் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பழங்குடியின சிறுமிகள் மூவர் கடத்தப்பட்டிருக்கின்றனர்...
ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட சேமூண்டி பழங்குடியின கிராமத்தில், கேரள பதிவெண் கொண்ட காரில் 3 சிறுமிகளை தங்களின் வீட்டு வேலைகளுக்காக கும்பல் கடத்தி இருக்கிறது...
வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் 3 சிறுமிகள் காரில் ஏற்றி அழைத்துச் செல்லப்படுவதை பார்த்து சந்தேகமடைந்த பகுதிவாசிகள், ஸ்ரீமதுரை ஊராட்சி மன்ற தலைவரிடம் தகவல் தெரிவித்து காரை துரத்திச் சென்று பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...
சிறுமிகளை காருக்குள் இருந்தவர்களிடம் இருந்து காப்பாற்றி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி காத்திருந்தது...
கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த இரு பெண் உட்பட மூவர் சிறுமிகளை கடத்த முயன்றதும், இதற்கு சேமூண்டி பழங்குடியின கிராமத்தை சேர்ந்த ஒருவர் கேரளாவில் இருந்துகொண்டே உதவி செய்ததும் அம்பலமானது..
போதிய விழிப்புணர்வும், வெளியுலக தொடர்பும் இல்லாத இப்பழங்குடியின மக்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி... வீட்டு வேலைகளுக்காக அவர்களின் குழந்தைகளை மூவரும் கடத்திய நிலையில், கையும் களவுமாக மாட்டி இருக்கின்றனர்...
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்...
இவர்களின் குழந்தைகள் கல்வி கற்பதில் பின் தங்கியுள்ள நிலையில், அவர்கள் கல்வி கற்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது...
இருப்பினும், இப்பழங்குடியின மக்களின் குழந்தைகள் கல்வியில் இடை நிற்றல் விகிதம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், தற்போது அவர்கள் தவறான வழியில் அழைத்துச் செல்லப்பட்டு வீட்டு வேலைகளுக்காக இவ்வாறு கடத்தப்பட்டிருப்பது பகீர் கிளப்பி இருக்கிறது...
மீட்கப்பட்ட மூன்று சிறுமிகளும் உதகையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோல் சிறுமிகள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என விசாரிக்க அதிகாரிகளை முடுக்கிவிட்டிருக்கிறார் நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா...
இதனிடையே, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், குழந்தை தொழிலாளர் சட்டங்கள் உட்பட 3 பிரிவுகளின் வழக்குபதிவு செய்த போலீசார், சிறுமிகளை கடத்த முயன்ற சுனீரா, பைரோசா மற்றும் முபாரிஸ் லால் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், தொடர்ந்து இவர்களின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்...