ஒட்டுண்ணியாக மாறி விட்ட காங்கிரஸ் கட்சியால் எந்த தேர்தலிலும் தனித்து வெற்றி பெற முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றியை தொடர்ந்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் எதிர்மறை அரசியலும் குடும்ப அரசியலும் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்றும், மகாராஷ்டிரா மாநிலம் தற்போது வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான உறுதியை வலுப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.காங்கிரஸ் குடும்பத்தால் அதிகாரம் இன்றி வாழவே முடியாது என்பதால் அதிகாரத்தை பெற அவர்கள் எத்தகைய எல்லைக்கும் செல்வார்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார்.காங்கிரஸ் கட்சி ஒட்டுண்ணியாக மாறிவிட்டது என்று கூறிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியால் எந்தவொரு தேர்தலிலும் தனித்து வெற்றி பெற முடியாது என்றும் கூறினார்.
காங்கிரஸ் கட்சி தாம் தனியாக மூழ்குவதுடன் தனது கூட்டணி கட்சிகளையும் சேர்த்து மூழ்கடித்து விடுகிறது என்றும், இது மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் இது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது என்றும் அவர் கூறினார்.
காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு என்ற முழக்கத்தை மீண்டும் எழுப்ப காங்கிரஸ் முயற்சித்தது என்றும், ஆனால், அம்பேத்கரின் அரசியலமைப்பு மட்டுமே மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியது என்பதால், உலகின் எந்த சக்தியாலும் 370 சட்டப்பிரிவை மீண்டும் கொண்டுவர முடியாது என்றும் அவர் கூறினார்.