மல்லுவுட்வில் வெடித்த எரிமலை.. ஓப்பனாக உடைத்த நிவேதா தாமஸ்.. அட்டூழியங்களால் அதிரும் மலையாளக் கரை..!

Update: 2024-09-03 16:41 GMT

கேரள திரையுலகை ஸ்தம்பிக்க செய்துள்ள பாலியல் விவகாரம் குறித்து நடிகைகள் வரிசையாக மனம் திறந்து பேசி வருகின்றனர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது முதல், பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வர பற்றி எரிகிறது சினிமாத்துறை..

அந்த வகையில், இளம் நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடூரங்களை பொதுவெளியில் போட்டுடைத்து வரும் சூழலில், தங்கள் காலத்திலும் பாலியல் தொல்லைகள் இருந்ததாக பகீர் கிளப்பியுள்ளார் பழம் பெரும் நடிகை சாரதா..

79 வயதான சாரதா இது தொடர்பாக பேசிய போது, மலையாளத் திரையுலகம் மட்டுமன்றி அனைத்து திரையுலகிலும் பாலியல் தொல்லை தொடர்பான பிரச்சினைகள் இல்லாமல் இருந்ததில்லை என குறிப்பிட்ட அவர், தனது காலக்கட்டத்திலும் இதே பிரச்சனை இருந்ததாக கூறியுள்ளார்.

பயம், தயக்கம் காரணமாக இதுகுறித்து வெளியில் சொல்லாமல் பலர் இருந்ததாக கூறிய அவர், கல்வியில் சிறந்துள்ள தற்போதைய தலைமுறைக்கு இதுகுறித்து வெளியில் பேச எவ்வித பயமும் இல்லை என கூறியுள்ளார்.

ஆனால் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியீட்டை தொடர்ந்து நடிகைகள் கூறி வரும் குற்றச்சாட்டுகள் வெறும் ஷோவுக்காக மட்டுமே என விமர்சனத்தையும் முன் வைத்துள்ளார்..

இதே போல் சந்திரமுகி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பழம்பெரும் நடிகை செம்மீன் ஷீலாவும் இதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ளார். நடிகைகள் தாங்கள் சந்தித்து வரும் மோசமான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேச முன் வர வேண்டும்.. எனவும் தனக்கு இது போன்ற அனுபவங்கள் ஏற்பட்டது இல்லை என தெரிவித்துள்ளார்.

ஆனால் எத்தனையோ நடிகர்கள் இருந்தும் ஒரு சில நடிகர்களின் பெயர் மட்டும் குறிப்பிடுவது ஏன் ? என கேள்வியும் எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த், கமல்ஹாசனின் மகளாக தமிழ் சினிமாவில் நடித்த நடிகை நிவேதா தாமஸ்-ம் இவ்விவகாரம் குறித்து பேசியுள்ளார். ஹேமா கமிட்டி மூலம் வெளிவந்த தகவல்கள் வருத்தமளிப்பதாக கூறியுள்ள அவர், வீட்டில் இருப்பதை விட பணியிடத்திலேயே பெண்கள் அதிக நேரம் இருப்பதால், ஹேமா கமிட்டியை போல மற்ற பகுதிகளிலும் கமிட்டிகள் வந்தால் நல்லது எனக் கூறியுள்ளார்.

இப்படி பல நடிகைகள் ஒரு புறம் கருத்து தெரிவிக்க, மற்றும் பலர் குற்றச்சாட்டுகள் முன்வைக்க, தினம்தினம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது பாலியல் குற்றச்சாட்டு விவகாரம்...

Tags:    

மேலும் செய்திகள்