அப்பாவை கருவறுக்க 6 மாதம் `சந்தா' கட்டிய ஆசை மகன் - இதுவரை நாடே பாரா க்ரைம்.. ஒரு ஸ்டேட்டையே புரட்டி போட்ட கேஸ்

Update: 2025-01-11 09:54 GMT

போலீஸ் வாகனத்தில் இருந்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படும் இவர்கள் சாதாரண ஆட்கள் இல்லை.....

இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற தந்தையை டிராக்டர் ஏற்றி கொலை செய்து விட்டு விபத்து நாடகமாடிய கொலைகார மகனும் அவரது கூட்டாளிகளும் தான்...

6 மாதங்களாக 30 லட்சம் பணத்துடன் தலைமறைவாக இருந்தவரை கூண்டோடு கைது செய்த பின்னணியை தெரிந்து கொள்ள பெங்களூரு செய்தியாளர் பாரதிராஜாவோடு போலீசாரின் கோப்புகளை புரட்டினோம்...

கொல்லப்பட்டவர் கர்நாடக மாநிலம் கலபுறுகியில் உள்ள ஆதர்ஷ் நகர் பகுதியை சேர்ந்த காளிங்கராயா.65 வயதான இவர் அதே பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இவருக்கு சதீஷ் என்ற ஒரு மகன் உள்ளார். அவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.

இந்த நிலையில் தான் 2024 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 8 ஆம் தேதி காளிங்கராயாவும் அவரது மகனும் ஷாபாத் நகருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பெள்ளூர் கிராஸ் என்ற இடத்தில் இருவரும் சென்ற பைக், டிராக்டர் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

அந்த விபத்தில் காளிங்கராயா தலை சிதைந்து உயிருக்கு போராட, மகன் சதீஷ் படுகாயமடைந்து நிலைகுலைந்திருக்கிறார். கொஞ்சம் நிதானத்துடன் இருந்த சதீஷ், உடனே ஆம்புலென்சுக்கு போன் செய்திருக்கிறார்.

சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலென்ஸ், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறது. காளிங்கராயா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி மருத்துவர்கள் பகீர் கிளப்பி இருக்கிறார்கள். சதீஷ் மட்டும் உயிர்பிழைத்து சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காளிங்கராயாவின் உடலை உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து விட்டு விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு டிராக்டர் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் சதீஷ்.

போலீசாரும் விபத்து மரணம் என வழக்கை முடிக்க சில நாட்களுக்கு பின் சதீஷை காவல் நிலையத்திற்கு அழைத்திருக்கிறார்கள். ஆனால் சதீஷ் வரவில்லை. இதனால் காவல்துறை சார்பில் விசாரணைக்கு ஆஜராகும் படி சதீஷுக்கு முறைப்படி நோட்டீஸ் விடப்பட்டிருக்கிறது. அதற்கும் எந்த பதிலுமில்லை.

ஒருகட்டத்தில் போலீசாருக்கு சந்தேகம் வலுக்க, உடனே அவரின் வீட்டிற்கு சென்று பார்த்திருக்கிறார்கள். அங்கே சதீஷ் இல்லை. குடியிருந்த வீட்டையும் , தந்தை நடத்தி வந்த ஹோட்டலையும் விற்றுவிட்டு குடும்பத்துடன் தலைமறைவாகி இருக்கிறார்.

இதனை அறிந்த போலீசார், நீண்ட தேடுதலுக்கு பின் சதீஷ், தெலுங்கானாவில் உள்ள அனந்தபூர் பகுதிக்கு குடி பெயர்ந்தது தெரியவந்திருக்கிறது.

உடனே அங்கு விறைந்த தனிப்படை போலீசார், சதீஷை கையோடு அழைத்து வந்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள். ஆரம்பத்தில் மோதியது டிராக்டர், கார், பஸ் என மாறி மாறி குழப்பிய சதீஷ், போலீசாரின் சிறப்பு கவனிப்பிற்கு பிறகு கிளிப்பிள்ளையை போல் நடந்ததை புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

தந்தை காளிங்கராயாவுடன் சேர்ந்து ஹோட்டலை நடத்தி வந்திருக்கிறார் சதீஷ். ஆனால் அதில் பெரிய லாபம் வரவில்லை. தொழிலில் நஷ்டம், குடும்ப கஷ்டம் என பல இடங்களில் கடன் வாங்கி ஹோட்டலை நடத்தி இருக்கிறார். ஆனாலும் பிஸ்சினஸ் படுத்திருக்கிறது.

வாங்கிய கடன்களும் கழுத்தை நெரித்திருக்கிறது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்த போது சதீஷின் நண்பர் அருண் என்பவர் ஒரு கொலைத்திட்டத்தை கூறி இருக்கிறார்.

தந்தை காளிங்கராயா வயதானவர் என்பதால், அவரின் மீது இன்சூரன்ஸ் போட்டு, பின் அவரை கொலை செய்து விட்டு, அந்த பணத்தை வைத்து பிரச்சனையை சரி செய்து விடலாம் என ஐடியா கொடுத்துள்ளார்.

டிராக்டர் ஏற்றி கொன்று விட்டு விபத்து போல செட்டப் செய்து விடலாம், யாருக்கும் சந்தேகம் வராது எனவும் சதீஷுக்கு அருண் ஸ்கெட்ச் போட்டு கொடுத்திருக்கிறார்.

அதன்படி அடுத்த நாளே தந்தை காளிங்கராயா பெயரில் 25 லட்சம் மற்றும், 5 லட்சத்திற்கு இரண்டு இன்சூரன்ஸ் போட்டு மாதம் தவறாமல் பணம் கட்டி வந்திருக்கிறார் சதீஷ். 6 மாதங்கள் பணம் கட்டியவுடன் தந்தைக்கு நாள் குறித்திருக்கிறார்.

சம்பவத்தன்று ஷாபாத் நகரில் உள்ள ஒருவரிடம் கடனாக பணம் வாங்கலாம் என தந்தையை அழைத்து சென்றிருக்கிறார் சதீஷ். பெள்ளூர் கிராஸில் டிராக்டருடன் தயாராக இருந்த அருண், சதீஷின் இருசக்கரவாகனத்தின் மீது வேகமாக வந்து மோதி இருக்கிறார்.

அப்போது கீழே விழுந்த காளிங்கராயாவின் மீது டிராக்டரை ஏற்றி இறக்கி தலையை சிதைத்து விட்டு டிராக்டருடன் அங்கிருந்து எஸ்கேப் ஆகி இருக்கிறார் அருண்.

இந்த பயங்கரத்துக்கு ராகேஷ் மற்றும் யுவராஜு என்ற இருவரும் அருணுக்கு துணையாக இருந்துள்ளார். திட்டப்படி அனைத்தும் வெற்றிகரமாக நடக்க, தந்தையின் பெயரில் போடப்பட்ட 30 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தையும் எடுத்திருக்கிறார் சதீஷ்.

தந்தையை கொலை செய்ததற்கு கூலியாக சதீஷுக்கு 5 லட்சமும், அவரது நண்பர்கள் ராகேஷ், யுவராஜூக்கு தலா 50 ஆயிரமும் கொடுத்துள்ளார்.

பின் சந்தோஷமாக இருக்கலாம் என நினைத்த போது தான், போலீசார் வழக்கை முடிக்க சதீஷை காவல் நிலையத்திற்கு அழைத்திருக்கிறார்கள். இதனால் பயந்து போன சதீஷ் எங்கே விசாரணையில் உண்மையை உளறிவிடுவோமோ என்ற பயத்தில் ஊரை காலி செய்துவிட்டு ஆந்திராவுக்கு வந்து செட்டிலாகி இருக்கிறார்.

ஆனால் அதுவே அவரை காட்டிகொடுத்துவிட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் சதீஷ், அருண், ராஜேஷ், யுவராஜ் ஆகிய நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்