பிரிட்டனில் வாரத்துக்கு நான்கு நாள் வேலை முறை கடைப்பிடிக்கப்பட்ட 100 நிறுவனங்களில் உற்பத்தித் திறன் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
பிரிட்டனில் தற்போது வாரத்தில் ஐந்து நாள்கள் வேலைமுறை நடைமுறையில் இருந்துவருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலும் பிரிட்டனிலும் தொடர்ச்சியாக நிலவிவரும் பணவீக்கத்தால், விலைவாசி கடுமையாக உயர்ந்துவருகிறது. இதைச் சமாளிக்க முடியாமல் நிறுவனங்களும் தனிநபர்களும் திணறிவரும் நிலையில், வாரத்தில் 5 நாள் வேலை என்பதை 4 நாளாகக் குறைக்கவேண்டும் எனும் பிரச்சார இயக்கம் வலுப்பெற்றது.
இதனிடையே கடந்த ஜூன் மாதம் நான்கு நாள் வேலைமுறை குறித்து ஆய்வு தொடங்கப்பட்டது. ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் ஆகிய பல்கலைக்கழகங்கள், பாஸ்டன் கல்லூரி, திங்க் டேன்க் அட்டானமி அமைப்பு ஆகியவை கூட்டாக இதை முன்னெடுத்தன.
ஆறு மாதங்கள் முடிவடைந்த நிலையில், இந்த ஆய்வில் கலந்துகொண்டுள்ள தொழில்நிறுவனங்களில் உற்பத்தித் திறன் 15 சதவீதம் அதிகரித்திருப்பது தெரியவந்தது.
உலகின் மிகப் பெரிய ஆடம் வங்கி, சந்தைப்படுத்தல் நிறுவனம் ஏவின் ஆகியற்றின் தலா 450 ஊழியர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.