இப்படியும் நடக்குமா..? ஒரு குடும்பத்தையே பிரித்த '2' தக்காளி... கணவனை விட்டு ஓடிய மனைவி..! தலைசுற்ற வைக்கும் உண்மை சம்பவம்
மத்திய பிரதேசத்தில் தன்னிடம் கேட்காமல் தக்காளியை எடுத்து கணவர் சமைத்ததால் மகளுடன் மனைவி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக மக்களுக்கு பெரும் தலைவலியை கொடுத்து வருகிறது இந்த தாறுமாறான தக்காளி விலை ஏற்றம்.
தக்காளியை தொடர்ந்து இதர காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலையேற்றம் இல்லத்தரசிகளை அடுப்பறையை கண்டாலே அலர்ஜியாக்கியுள்ளன.
பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தும் ஏழை நடுத்தர குடும்பங்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றன.
இப்படி பல குடும்பங்களை திண்டாட வைத்துள்ள இந்த தக்காளியின் விலை ஏற்றம்... இன்று மத்திய பிரதேசத்தில் உள்ள ஷாஹ்டோல்(Shahdol) மாவட்டத்தில் கணவன் மனைவி இருவரையும் பிரித்தே விட்டது.
எல்லாத்திற்கும் காரணம் இந்த தக்காளி தான் என மகளையும் மனைவியையும் பிரிந்த விரக்தியில் புலம்பி வருகிறார் அந்த மனிதர்.
ஷாஹ்டோல் மாவட்டத்தில் பஸ் ஸ்டாண்டு ஓரத்தில் ரோட்டு கடை நடத்தி வரும் சஞ்சீவ் பர்மன்... காலை சிற்றுண்டி தயாரித்துக்கொண்டிருந்த போது மனைவியிடம் கேட்காமல் இரண்டு தக்காளியை சேர்த்து உள்ளார்.
தக்காளி இருக்கும் விலையில் எப்படி கூடுதலாக 2 தக்காளியை கூடுதலாக சேர்தீர்கள் என்று கணவனிடம் கேட்டுள்ளார் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே கோபித்துக்கொண்டு மகளையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார் சஞ்சீவின் மனைவி.
காணாமல் போன தனது மனைவியும் மகளையும் மூன்று நாள் தேடியும் அவர்கள் கிடைக்காததால்... காவல் நிலையத்தின் கதவைத் தட்டிய சஞ்சீவ் பர்மன், போலீசாரிடம் அவர்களைத் தேடி கண்டுபிடித்துக் கொடுக்குமாறு புகார் அளித்துள்ளார்.
இப்படி மத்திய பிரதேசத்தில் தம்பதியர் பிரிய காரணமாகி இருக்கிறது, இந்த தக்காளி.