தமிழக சட்டப்பேரவை வரும் 17-ஆம் தேதி கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய அவசரச் சட்டம் இயற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி சூதாட்டங்களைத் தடை செய்வதற்கான அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை கடந்த மாதம் 26-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, அந்த சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பேரவை கூடும் வரை ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காவிட்டால், ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்யும் சட்டத்தை இயற்றுவதற்கான மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்படும். பின்னர் விவாதத்துக்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, மசோதா நிறைவேற்றப்படும். அப்போதும் ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்டம் அமலுக்கு வரும்.