தமிழகத்தில், நுகர்வோர் விலைக் குறியீடு உயர்வின் அடிப்படையில், மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருப்பதால், மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. தமிழக வரலாற்றில், 10 மாதங்களில், இரண்டாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்துவது, இதுவரை நிகழ்ந்ததில்லை. மீண்டும் கட்டண உயர்வு என்பது, மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல். எனவே, ஜூலை முதல் கட்டணத்தை உயர்த்தும் முடிவை, மின்வாரியம் கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மின் கட்டணத்தை ஆறு சதவீதம் அல்லது மின் வாரிய பணவீக்கம் 4.7% அளவிற்கு உயர்த்திக் கொள்ளலாம் என மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு அறிவித்தது.
ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு நடப்பாண்டு ஜூலை மாதம் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.