"உன் காசு சல்லி பைசா வேணா..புருஷன் உசுரு ஊசலாடுது..என் காச கொடுத்துடு" தலையில் அடித்து கதறும் நயன் அத்தை

Update: 2023-07-07 04:56 GMT

பூர்வீக சொத்தை ஏமாற்றி விற்றதாக, நடிகை நயன்தாரா உட்பட அவரது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதனை விவரிக்கிறது இந்த தொகுப்பு..

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் தொடங்கி இரட்டை குழந்தைகள் வரை ஒவ்வொன்றும் சர்ச்சை தான்..

காதல் திருமணம் செய்த இந்த தம்பதிக்கு விக்னேஷ் சிவன் தரப்பு ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இப்போது மீண்டும் அவர்கள் வாயிலாக மற்றொரு விவகாரம் பூதாகரத்தை கிளப்பியுள்ளது.

பூர்வீக சொத்தை விக்னேஷ் சிவனின் தந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் ஏமாற்றி விற்றதாகவும், அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்றும் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து. இவருடன் பிறந்தவர்கள் 9 பேர்.

இவர்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்தை, உடன் பிறந்தவர்களின் அனுமதி இல்லாமல், சிவக்கொழுந்து, அவரது மனைவி உட்பட குடும்பத்தினர் வேறொரு நபருக்கு விற்றதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக விக்னேஷ் சிவனின் குடும்பத்தினர் மீது உறவினர்கள் வழக்கு தொடர்ந்த நிலையில், சொத்தில் அனைவருக்கும் பங்கு இருப்பதால், உரிய வகையில் பிரித்துக் கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த விவகாரத்தில் இருதரப்பிலும் உடன்பாடு எட்டப்பட்டதாக தெரியவில்லை.

இந்த நிலையில், லால்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், விக்னேஷ் சிவனின் சித்தப்பா குஞ்சிதபாதம் மற்றும் பெரியப்பா மாணிக்கம் ஆகியோர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், பூர்வீக சொத்தை தங்களுக்கே தெரியாமல் ஏமாற்றி விற்றுள்ளதாகவும், மோசடியாக பொது சொத்தை விற்ற சிவக்கொழுந்துவின் மனைவி மீனாகுமாரி, மகன் விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் சகோதரி ஐஸ்வர்யா ஆகியோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சிவக்கொழுந்துவின் தம்பியான குஞ்சிதபாதம் என்பவருக்கு, இருதய குழாயில் அடைப்பு காரணமாக, இருதய அறுவை சிகிச்சை செய்ய 5 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இட்லி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வரும் குஞ்சிதபாதம் மற்றும் அவரது மனைவி சரோஜாவிற்கு, அறுவை சிகிச்சை செய்ய 5 லட்ச ரூபாய் பணத்தை திரட்டுவது என்பது இயலாத ஒன்றாக உள்ளது. அதனால், சொத்தில் உள்ள பங்கை தந்தால் மட்டுமே கணவனின் உயிரை காப்பாற்ற முடியும் என குஞ்சிதபாதத்தின் மனைவி சரோஜா கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்.

"எங்க சொத்த எங்கக்கிட்ட கொடுத்துருங்க"

"என் புருஷன எப்படி காப்பாத்தப்போறேன்னு தெரியல"

"இட்லி கடை நடத்திதான் பிழைப்பு நடத்துறோம்"

"விக்னேஷ்கிட்ட நாங்க 10 பைசா கேட்கல"

எல்லாருக்கும் சொந்தமான நிலத்தை விக்னேஷின் தந்தை விற்றுள்ளார். தங்களுக்கான உரிமைத் தொகை வந்தால், மருத்துவ செலவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் உதவும் என விக்னேஷ் சிவனின் சித்தப்பா குஞ்சிதபாதம் உருக்கத்துடன் கூறியுள்ளார்.

"10 பேருக்கு சொந்தமான நிலத்த விக்னேஷ் தந்தை வித்திருக்காரு"

"இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது"

"நிலத்தை மீட்டுக் கொடுத்தா நல்லாயிருக்கும்"

"மருத்துவ செலவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் உதவும்"

விக்னேஷ் குடும்பத்தை தவிர, அவர் தந்தையுடன் பிறந்தவர்கள் அனைவரும் கஷ்டப்படுகின்றனர். தனது தம்பி குஞ்சிதபாதத்திற்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு விக்னேஷ் சிவன் குடும்பத்தினரே காரணம் என பெரியப்பா மாணிக்கம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளாார்.

"9 பேருக்கு சொந்தமான சொத்தை வித்திருக்காரு"

"எங்க குடும்பத்துல எல்லாரும் கஷ்டப்படுறோம்"

"என் தம்பிக்கு எதாவது ஆச்சுன்னா விக்னேஷ் குடும்பமே காரணம்"

குடும்பத்தினர் அளித்த புகாரில், நடிகை நயன்தாராவின் மீதும் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என மனுவில் இணைக்கப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் இன்னும் சூடுபிடித்துள்ளது.

விக்னேஷ் சிவன் மற்றும் அவரது உறவினர்கள் பேசி சுமூக முடிவை எட்டுவார்களா? என்பது இதன் அடுத்தகட்ட விசாரணைகளே உறுதி செய்யும்..

Tags:    

மேலும் செய்திகள்