நவீன இந்தியாவை கட்டமைத்தவரும், இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவகர்லால் நேரு மறைந்த தினம் இன்று.
1889 நவம்பரில், அலகாபாத்தில் பிறந்த நேரு, இங்கிலாந்தில் உள்ள ஹாரோ பள்ளியில் பயின்றார். பின்னர் கேம்ப்ரிட்ஜ் பலகலைகழகத்தில் பட்டம் பெற்று, வழக்கறிஞரானார்.
இந்தியா திரும்பிய பின், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேசிய விடுதலைக்கு போராடினார். காந்தியடிகளின் பிரதான சீடராக மாறி, அவரின் முழு நம்பிக்கையை பெற்றார். 1929ல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கு பெற்று, பல்வேறு கட்டங்களாக மொத்தம் ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த இடதுசாரிகளுடன் இணைந்து, சோசியலிச கொள்கைகளை முன்மொழிந்தார். மதாசார்பின் மை, மற்றும் இதர நவீனத்துவ கொள்கைகளை நோக்கி காங்கிரஸை நகர்த்தினார். பல நூல்களையும், கட்டுரை களையும் எழுதினார்.
நேருவின் செயல்பாடுகளில் நெகிழ்ந்த காந்தி, ஒரு கட்டத்தில் நேரு தான் தனது அரசியல் வாரிசு என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின், இந்தியாவிற்கு சுதந்திர அளிக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர்.
1946ல் பதவியேற்ற இடைக்கால அரசில், இந்தியாவின் பிரதமராக நேரு பதவியேற்றார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட மத கலவரங்கள் மற்றும் படுகொலைகளை கட்டுப்படுத்த அரும்பாடுபட்டார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக 1947 ஆகஸ்ட் 15ல் பதவியேற்று, செங்கோட்டையில், இந்திய தேசிய கொடியை ஏற்றினார். பொதுத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று, அடுத்த 17 ஆண்டுகளுக்கு இந்தியாவின் பிரதமராக, சிறப்பாக பணியாற்றி பெரும் புகழடைந்தார்.
ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டார். சோசியலிச பொருளாதார கொள்கைகளை படிப்படியாக அமல்படுத்தி, பொதுத் துறை நிறுவனங்களை கட்டமைத்தார். பிரம்மாண்டமான அணை கட்டுமானங்களை உருவாக்கி, விவசாய வளர்ச்சிக்கு வித்திட்டார்.
அமெரிக்கா, ரஷ்யா சார்பு நிலைகளுக்கு பதிலாக, அணி சேரா நாடுகள் கூட்டமைப்பை உருவாக்கி, வழிநடத்தினார். 1964இல், உடல்நலக் குறைவு காரணமாக, தமது 75 வது வயதில் காலமானார்.
சுதந்திர இந்தியாவின் தன்னிகரற்ற தலைவரான ஜவகர்லால்
நேரு மறைந்த தினம், 1964, மே 27.