செந்தில் பாலாஜியை நேரில் பார்த்த அடுத்த நொடியே நீதிபதி போட்ட உத்தரவு.. மருத்துவமனையில் நடந்த பரபரப்பு சம்பவம்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான உத்தரவு இன்று வழங்கப்படுகிறது.
அமலாக்கத் துறை கைது செய்த பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதய ரத்தக் குழாய்களில் 3 இடங்களில் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து செந்தில் பாலாஜியிடம் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்து, அவரை 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை துன்புறுத்தியதாகவும், அவருடைய குடும்பத்தினருக்கு முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அவர்களின் குற்றச்சாட்டுக்கு அமலாக்கத் துறை மறுப்பு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான உத்தரவை நீதிபதி அல்லி இன்றைக்கு ஒத்திவைத்தார். இதேபோல், செந்தில் பாலாஜியை 15 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவையும் நீதிபதி அல்லி இன்றைக்கு ஒத்திவைத்தார். இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவும், இன்று விசாரணைக்கு வரவுள்ளது.