சொத்து தகராறால் நடந்த கொடூரம்,சித்தப்பாவை துப்பாக்கியால் சுட்டு கொன்ற இளைஞர் - தி.மலையில் அதிர்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே சொத்துக்காக சித்தப்பாவையே, நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போளூர் அடுத்த பலாக்கானூர் மேட்டு கொல்லை பகுதியை சேர்ந்த சகோதரர்கள் கோவிந்தன் மற்றும் துரைசாமி ஆகிய இருவரும் சொந்தமாக விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கோவிந்தன் மகன் ஏழுமலை தனது வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியால் சித்தப்பா துரைசாமியை சுட்டுள்ளார். இதில், வயிற்றில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த துரைசாமி மயங்கி விழுந்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, போலீசில் சரணடைந்த ஏழுமலை மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.