மாமியாரிடம் பெற்றோர் மானத்தை காப்பாற்ற மருமகள் செய்த காரியம் - விசாரணையில் அம்பலமான "தாலி" நாடகம்
திருப்பத்தூரில் தனது தாயிடம் இருந்து நகை வாங்கி வர சொல்லி மாமியார் வற்புறுத்தியதால், தான் அணிவித்திருந்த தங்க தாலியை விற்று தாலி திருடப்பட்டதாக கூறி பெண் ஒருவர் போலீசாரை அலைய விட்ட சம்பவம் நடந்துள்ளது.
வாணியம்பாடி அருகே வசித்து வரும் தம்பதியர் ராஜேஷ் - நந்தினி. இத்தம்பதியினருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இந்நிலையில், பிறந்த குழந்தைக்கு நந்தினியின் பெற்றோரை நகை அணிவிக்க சொல்லி நந்தினியின் மாமியார் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. தனது பெற்றோரால் நகை அணிவிக்க இயலாததை அறிந்த நந்தினி, தான் அணிந்திருந்த தங்க தாலியை தனது பெற்றோரிடம் கழட்டி கொடுத்துள்ளார். இதை தாங்கள் அடமானம் வைத்து குழந்தைக்கு நகை அணிவியுங்கள் எனவும், நகையை மர்மநபர்கள் பறித்து சென்று விட்டார்கள் என மாமியாரிடம் கூறிக்கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். அதை போலவே போலீசிலும் புகாரளித்த்திருக்கிறார். போலீசாரும் இவ்வழக்கை தீவிரமாக விசாரித்தும் துப்பு கிடைக்காததால் நந்தினியின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் நந்தினியை விசாரிக்கையில் நந்தினி நடந்த உண்மையை கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். நகை காணாமல் போனதாக கூறி போலீசை 15 நாட்களுக்கும் மேலாக அலைய வைத்த சம்பவம் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.