செந்தில்பாலாஜி கைது.. திருப்பி அடித்த CM ஸ்டாலின்.. இத எதிர்பார்க்கலேயே.. ஷாக்கில் டெல்லி
தமிழக அரசு சிபிஐ-க்கான பொது ஒப்புதலை திரும்பப்பெற்றிருப்பது சிபிஐ விசாரணையில் எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு
சிபிஐ... நாட்டில் அதிகாரமிக்க அமைப்புகளில் ஒன்று...
டெல்லி சிறப்புக் காவல் நிறுவன சட்டத்தின் கீழ் செயல்படுகிறது. டிஎஸ்பிஇ சட்டம் பிரிவு 6-ன் கீழ், ஒரு மாநிலத்தில் குற்றங்களை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றால் அதற்கு குறிப்பிட்ட மாநிலத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். ரெயில்வே, மத்திய அரசு அலுவலகங்களில் விசாரணையை மேற்கொள்ள இந்த ஒப்புதலை சிபிஐ பெற வேண்டாம். பொதுவாக மாநிலங்கள், மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை தடையின்றி விசாரிக்க சிபிஐக்கு உதவ பொது ஒப்புதலை வழங்கியிருந்தது. இதனால் மற்ற வழக்குகளிலும் சிபிஐ நேரடியாக விசாரணையை தொடங்கும் அதிகாரம் இருந்தது.
இந்த சூழலில் கடந்த 2015 ஆம் ஆண்டு மிசோரம் அரசு சிபிஐக்கான பொது ஒப்புதலை திரும்பப்பெற்றது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு சிபிஐயை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தவறாக பயன்படுத்துகிறது என குற்றம் சாட்டிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சிபிஐக்கான பொது ஒப்புதலை திரும்பப்பெற்றார். மேற்கு வங்கத்தை தொடர்ந்து எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் சிபிஐக்கான பொது ஒப்புதல் திரும்பப்பெறப்பட்டது. தமிழகம் எதிர்க்கட்சி ஆளும் மாநிலமாக இருந்தாலும், பொது ஒப்புதலை திரும்பப்பெறுவதில் விலகியிருந்தது.
இதற்கிடையே பொது ஒப்புதலை திரும்பப்பெற்ற மராட்டியம், ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்படவும் மீண்டும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்த தகவலில், மேற்கு வங்கம், சத்தீஷ்கார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், கேரளா, மேகலாயா, மிசோரம், பஞ்சாப், தெலுங்கானா ஆகிய 9 மாநிலங்கள் சிபிஐ பொது ஒப்புதலை திரும்ப பெற்றுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. இப்போது 10 ஆவதாக தமிழகமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு மாநில அரசின் அதிகார வரம்புக்குள் சிபிஐ விசாரணை நடத்தும்போது ஒப்புதல் பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றமும் தெரிவித்திருந்தது.
செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து, சிபிஐக்கான பொது ஒப்புதலை திரும்பப்பெறுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இனி, தமிழகத்தில் விசாரணையை மேற்கொள்ள ஒவ்வொரு வழக்குக்கும் சிபிஐ ஒப்புதலை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.