சீர்திருத்த பள்ளியில் சிறுவன் மர்ம மரணம்... பரபரப்பு சம்பவம் - தாய் பகீர் குற்றச்சாட்டு
செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்த சிறுவன், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், காவல்துறையினர் அடித்துக் கொன்று விட்டதாக, தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியை சேர்ந்த பழனி - நிர்மலா தம்பதியின் 17 வயதான மூத்த மகன், தாம்பரம் ரயில் நிலையத்தில், ரயில்வே துறைக்கு சொந்தமான பேட்டரி திருடியதாக கைது செய்யப்பட்டார்.
பின்னர், கடந்த மாதம் 29ம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சிறுவன் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், ஏற்கனவே வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவலர்கள் அடித்துக் கொன்றுவிட்டதாக உயிரிழந்த சிறுவனின் தாய் நிர்மலா குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மகனின் உடலில் காயங்கள் இருப்பதால், அது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.