உயிரை உருக்கி வண்ணம் குழைத்து உணர்ச்சிகளை தீட்டிய மாற்றுத்திறனாளிகள் - சென்னையில் பிரம்மனை விஞ்சிய பிரமாண்டம்..!

Update: 2023-06-26 08:38 GMT

சென்னையில் தொடங்கியுள்ள மாற்றுத்திறனாளி கலைஞர்களின் ஓவிய கண்காட்சி காண்போர் கண்களுக்கு விருந்தாய் அமைந்துள்ளது. இந்த கண்காட்சியில் அப்படி என்ன சிறப்பு உள்ளது என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆர்ட் ஹவுசில் மாற்றுத்திறனாளி கலைஞர்களின் ஓவிய கண்காட்சி தொடங்கியுள்ளது. இதில் ஜல்லிக்கட்டு, உழவு தொழில், கிராமத்து வாழ்க்கை, காடுகள் என பல்வேறு தலைப்புகளில் ஓவியங்கள் வரைந்து ரசிக்க வைத்துள்ளனர்.

இந்த ஓவியங்கள் அனைத்துமே கண் தெரியாத, வாய் பேச முடியாத, பல மாற்றுத்திறனாளிகளின் கைவண்ணம் தான். தங்களுக்கென மனதிற்குள் தனி உலகம் உருவாக்கி கற்பனைகள் வளர்த்து அதனை வண்ணங்களாய் தீட்டி ஓவியமாய் கண்குளிர செய்துள்ளனர். தங்கள் சுக துக்கங்களை, சிந்தனைகளை ஓவியத்தின் மூலம் மாற்றுத்திறனாளி கலைஞர்கள் பிரதிபலித்துள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் சபினா விஜய்.

வாட்டர் கலர், அக்ரலிக் கலர் உள்ளிட்ட வண்ணங்களின் மூலம் ஒரே மாதிரி இல்லாமல் ஒவ்வொரு விதத்தில் தனித்துவத்துடன் ஓவியங்கள் காட்சியளிக்கின்றன. இப்படி தனித்துவம் வாய்ந்த 50க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

ஓவிய கண்காட்சியில் பங்கு பெற்றுள்ள வித்தார்த்தியின் தாயார் தனது மகளின் படைப்பை பார்த்து வியந்தார். வாய் பேச முடியாத தன் மகள் அவர் மனதில் இருக்கும் உணர்ச்சிகளை ஓவியமாக சிறு வயதில் இருந்தே வரைந்து வருகிறார் என நெகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

ஜூன் 28ம் தேதி வரை இலவசமாக நடைபெறும் கண்காட்சியில் விற்பனை ஆகும் ஓவியங்களின் வருமானம் அதனை வரைந்த மாற்றுத்திறனாளி ஓவியருக்கே சேரும். கண்களை மட்டுமன்றி எண்ணங்களையும் வண்ண மயமாக்கும் இந்த கண்காட்சி உள்ளம் மகிழ வைப்பதாக பார்வையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்