கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த பட்டதாரி பெண்ணான செல்வி என்பவர், ஆன்லைன் மூலம் சம்பாதிக்க முடிவு செய்து, அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அந்த சமயத்தில், அவரது மின்னஞ்சலுக்கு வந்த குறுஞ்செய்தியில், புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்து கண்டுபிடித்து விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த மருந்தின் விலை ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் எனவும், அதனை வாங்கி சப்-டீலராக விற்பதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய செல்வி, அந்த நபர்களை தொடர்புகொண்டு, அவர்களது வங்கி கணக்குக்கு பல்வேறு தவணைகளில் 32 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார். ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட மோசடி நபர்கள், மருந்து ஏதும் அனுப்பவில்லை. இதுதொடர்பாக கடலூர் சைபர் கிரைமில், செல்வி அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டை சேர்ந்த 4 பேரை, மகாராஷ்டிரா மாநிலம் கார்காரை பகுதியில் போலீசார் கைது செய்தனர்.