மாண்டஸ் புயல் எதிரொலி - செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பு | chembarambakkam | chennai
சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு உபரி நீரின் வரத்து அதிகரித்ததை அடுத்து அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் கனிசமாக உயர்ந்திருந்தது. இதையடுத்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் ஆதரமாக விளங்கக்கூடிய ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைபாக்கம் ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் வருகையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் அணையின் நீர்மட்டத்தை பொதுபணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. மாண்டஸ் புயலின் காரணமாக பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்தது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான புழல் ஏரி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஏரிகளுக்கான நீர்வரத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும், நீரின் வரத்துக்கேற்ப உபரி நீர் வெளியேற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.