பாம்பு கடித்து பலியான சிறுமி... பார்க்க வந்த கலெக்டருக்கே ஏற்பட்ட கஷ்டம் -உயிர்பலியால் கிராமத்திற்கு கிடைத்த விமோச்சனம்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள மலைக்கிராமத்தில், பாம்பு கடித்து பலியான குழந்தையின் உடலை 10 கிலோ மீட்டர் தூரம் வரை உறவினர்கள் கையில் ஏந்தியபடி நடந்தே சென்ற சம்பவம் மனதை உலுக்கின. அல்லேரி மலைகிராமத்திற்கு உட்பட்ட அத்திமரத்து கொல்லை கிராமத்தில் வசித்து வரும் கூலித் தொழிலாளி விஜி- பிரியா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை தனுஷ்காவை, நல்ல பாம்பு கடித்தது. உரிய சாலை வசதி இல்லாததன் அவலநிலையால், சிறிது தூரம் பைக்கிலும், சிறிது தூரம் நடந்து சென்றும், சிறிது தூரம் ஆம்புலன்சிலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை, நீண்ட நேரம் தாமதமானால், அதன் உயிர் பாதி வழியிலேயே பறிபோனது.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு, குழந்தையின் உடல் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஆனால் பாதி தூரம் சென்ற ஆம்புலன்ஸ், சாலை வசதி இல்லாததால், பாதியிலேயே நின்றது. இதனால், குழந்தையின் உடலை பாதி வழியிலேயே ஆம்புலன்ஸில் இருந்து இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கதறி அழுதபடி குழந்தையை கையில் வாங்கிய தாய், அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தூரம் வரை உடலை சுமந்து சென்றது சோகத்திலும் சோகம்... இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும், அனுதாபத்தையும் ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழத் தொடங்கின.
இந்த நிலையில், அல்லேரி மலைக் கிராமத்திற்கு, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய சென்றனர். ஆனால், மாவட்ட ஆட்சியரின் கார் மலைப் பாதையில் சிக்கி கொண்டது. இதையடுத்து, இருசக்கர வாகனத்தில் மலைக் கிராமத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சியர், உயிரிழந்த குழந்தையின் பெற்றோரை சந்தித்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் பேசிய ஆட்சியர், மலைக் கிராமத்தில் 20 நாட்களுக்கு முன்பே சாலை பணிகள் தொடங்கி விட்டதாகவும், இனி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
குமாரவேல் பாண்டியன், மாவட்ட ஆட்சியர்
- "மலை கிராமத்திற்கு சீரான சாலை அமைக்கப்படும்"
- "20 நாட்களுக்கு முன்பே சாலை பணிகள் தொடக்கம்"
- "குழந்தையின் பெற்றோரிடம் வருத்தம் தெரிவித்தேன்"
- "இனி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுக்கப்படும்"
பொதுமக்களுக்கான அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படும் போதுதான், இதுபோன்ற அவல சம்பவங்களை தடுக்க முடியும் என்பதே பொதுமக்களின் எண்ணமாக உள்ளது.