மேலே ஏற ஏணி...உள்ளே போக வெல்டிங்.. நகைக்கடையை சுருட்டி சென்ற கும்பல்.. பக்கா பிளானோடு நடந்த பயங்கர கொள்ளை
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வடக்கு வீதி... பல்வேறு முக்கிய கடைகள் அடங்கியுள்ள இப்பகுதி, எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். நித்தேஷ் என்பவர் அப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக நகைக்கடை ஒன்று நடத்தி வருகிறார்.
வழக்கம்போல், காலை வேளையில் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கடையை திறந்துள்ளனர். அப்போது அலங்கோலமாக கிடந்த கடையை கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். Show Case-யில் வைக்கப்பட்டிருந்த நகைகள் அனைத்தும் காணாமல் போயிருந்தது. அதன் பின்பு உடனடியாக, கடையின் முதல் தளத்தில் சென்று பார்த்தபோது, அங்கிருந்த ஏராளமான வெள்ளிப் பொருட்களும் மாயமாகி இருந்தன. உடனே இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கடையை முற்றிலும் சோதனை செய்தனர். கடையின் 3வது தளத்தில் பொருத்தப்பட்டிருந்த இரும்புக் கதவானது, கேஸ் வெல்டிங் மூலமாக துளையிட்டு, அதன் மூலம் உள்ளே சென்று, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
பின்னர், கடையில் காணாமல் போன பொருட்கள் குறித்து ஆய்வு செய்ததில், 75 சவரன் தங்க நகைகள் மற்றும் 40 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடு போயிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ஏறத்தாழ 50 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
கொள்ளையடிக்கப்பட்ட நகைக் கடைக்கு, மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் கொள்ளை அடிக்கப்பட்ட நகைக்கடையை நேரில் பார்வையிட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில், கடையின் மேல் தளத்திற்கு வருவதற்காக, டெலஸ்கோப் லேடர் எனப்படும் ஏணி வகையை கொள்ளையர்கள் பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது. திருட்டுக்கு பின்னர் அந்த ஏணியை பள்ளியின் பின்புறம் உள்ள முட்புதரில் வீசிச் சென்றதும் கண்டறியப்பட்டது. மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டுள்ளதும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவனின் உத்தரவின் பேரில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மர்மநபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, நகைக் கடைக்கு அருகில் உள்ள கடைகளில், சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும்,
கொள்ளையடிப்பதற்குப் பயன்படுத்திய கேஸ் வெல்டிங் இயந்திரம், டெலஸ்கோப் லேடர் எனப்படும் ஏணி ஆகியவை எங்கு வாங்கப்பட்டது என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நகரின் மையப்பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.