திமுக-வை வைத்து பாஜக-வுக்கு ஸ்கெட்ச் போடும் கெஜ்ரிவால் - அதிகாரம் யாருக்கு..? கிடுகிடுக்கும் டெல்லி

Update: 2023-06-24 09:00 GMT

பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் எதிர்பார்த்தப்படியே ஆம் ஆத்மி எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில், காங்கிரசிடமிருந்து ஆம் ஆத்மி எதிர்பார்ப்பது என்ன...? என்பதை இப்போது பார்க்கலாம்...

டெல்லியில் அரசு அதிகாரிகள் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் மத்திய அரசு மசோதாவை மாநிலங்களவையில் முறியடிக்க கெஜ்ரிவால் போராடுகிறார்.

245 எம்.பி.க்களை கொண்ட மாநிலங்களவையில் இப்போது 7 இடங்கள் காலியாக உள்ளதால் 238 எம்.பி.க்கள் உள்ளனர். இங்கு ஒரு மசோதா தாக்கலாகி நிறைவேற 120 எம்.பி.க்கள் ஆதரவு அவசியமாகிறது. அவையில் இப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மொத்தம் 109 எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது.

மசோதாவை தோற்கடிக்க எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்த கெஜ்ரிவால், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல கட்சிகளை சேர்ந்த 70 எம்.பி.க்கள் ஆதரவை திரட்டியிருக்கிறார்.

இப்போது அவையில் 31 எம்.பி.க்களை கொண்ட காங்கிரஸ் ஆதரவு கெஜ்ரிவாலுக்கு மிக முக்கியமாக இருக்கிறது. காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதரவும் கிடைக்கும் போது 101 எம்.பி.க்கள் வாக்கு கிடைக்கும்.

இதுபோக மற்ற கட்சிகள் 28 எம்.பி.க்களை கொண்டுள்ளன. இதில் பாஜக கூட்டணியில் இல்லாத பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் தலா 9 எம்.பி.களை கொண்டுள்ளன. இந்த கட்சிகளின் ஒத்துழைப்பு கெஜ்ரிவாலுக்கு மிக அவசியம்.

பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளில் ஒரு கட்சி ஓட்டெடுப்பிலிருந்து விலகி, ஒரு கட்சி பாஜகவை ஆதரித்தாலும் கெஜ்ரிவால் முயற்சிக்கு தோல்வியே மிஞ்சும்...

அவசியத்தை பொறுத்து இந்த இரு கட்சிகளும் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவளித்து வருகிறது. இப்போது மாநில நிர்வாகம் சம்பந்தப்பட்டது என்பதால் இக்கட்சிகள் முடிவு எப்படி இருக்கும் என்பதும் முக்கியம் பெறுகிறது.

இது ஒரு சவாலாக பார்க்கப்பட்டாலும், அதற்கு முன்னதாக காங்கிரஸ் ஆதரவு கெஜ்ரிவாலுக்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது. டெல்லியை தொடர்ந்து, பஞ்சாபிலும் ஆட்சியை பிடித்துவிட்ட ஆம் ஆத்மி குஜராத், அரியானா, கோவா மாநிலங்களில் காலூன்றுவது காங்கிரசை பலவீனமாக்குகிறது. மறுபுறம் தேசியக் கட்சியாக இருக்கும் காங்கிரஸ், டெல்லியில் மாநில அரசுக்கு அதிகாரம் என்பதை எப்படி பார்க்க போகிறது என்ற கேள்வியும் எழுகிறது. இந்த கணக்குக்கு மத்தியில் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. மசோதா விவகாரத்தில் டெல்லியில் நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக முடிவு எடுக்கப்படும் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

பாட்னா கூட்டத்திலும் காங்கிரஸ் -ஆம் ஆத்மி இடையே இந்த விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கூட்டம் முடிந்ததும் காங்கிரசுடன் இணைந்து செயல்படுவது கடினம் என கூறியிருக்கிறது ஆம் ஆத்மி. டெல்லி நிர்வாக மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் வெளிப்படையாக ஆதரவை தெரிவிக்காத வரையில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துக் கொள்ள போவது இல்லை என தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கெஜ்ரிவாலும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பாதையில் பயணிக்க உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரசும், பாஜகவையும் எதிர்க்கும் சந்திரசேகர ராவ், தனித்து போட்டியிட போவதாக தெரிவித்திருக்கிறார். அப்படி ஆம் ஆத்மி களமிறங்கினால் மீண்டும் சில மாநிலங்களில் காங்கிரசுக்கே சிக்கல் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்...

Tags:    

மேலும் செய்திகள்