மழையால் பேப்பர் போல ஊறி போன வீடு..10 வயது சிறுவனுக்கு இப்படி ஆயிடுச்சே..ஆறுதல் தெரிவித்த Collector
கோவை செல்வபுரம் கல்லாமேடு பகுதியை சேர்ந்தவர் தாஜுதீன். இவருக்கு சொந்தமாக குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள வீடு, பழுதடைந்துள்ளது. இதனால் அவர் அதேபகுதியில் உள்ள வேறொரு வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் தாஜுதீனின் 10 வயது மகனான முஹம்மது ஃபாசில், பழுதடைந்த வீட்டின் உள்ளே சென்றுள்ளார். அப்போது கனமழையால் ஊறி இருந்த வீட்டின் சுவர்இடிந்து, சிறுவன் மீது விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுவன், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கோவை ஆட்சியர் மற்றும் மாநகரமேயர் ஆகியோர், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்ததோடு, சிறுவனை நேரில் சந்தித்து அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அப்போது ஆட்சியர், இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக கூறினார். மேலும் பழுதடைந்துள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.