கடந்த 2020 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் மீது இளம் பெண் போலீசில் புகாரளித்தார்... அவரின் துணிகர புகாரால் பல பெண்களும் அவரைப்போல, அந்த இளைஞரிடம் சிக்கி சின்னா பின்னமானது வெளிச்சத்திற்கு வந்து தமிழகத்தையே பரபரப்பாக்கியது... குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் மீது 8 வழக்குகள் போலீசார் பதிவு செய்த நிலையில், அதில் ஒரு வழக்கில் அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையை வாங்கி கொடுத்துள்ளது... கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த 26 வயது இளைஞரான காசி, சமூக வலைதளங்களான பேஸ் புக், இன்ஸ்டாகிராம் மூலம் பெண்கள் பலருக்கு வலை விரித்து ப்ளே பாயாக மாறிப்போனார்... செல்போனில் பெண்களை கவரும் வகையில் பேசி, பள்ளி மாணவிகள் முதல் திருமணமான பெண்களை காதல் வலையில் விழ வைத்த இவர், அவர்களை நேரில் சந்திக்க வற்புறுத்தி பலரை தனியே சந்தித்திருக்கிறார்...
அப்போது, அவர்களை பாலியல் வன் கொடுமை செய்து, அதை அவர்களுக்கே தெரியாமல் தன்னுடைய செல்போனில் படம் பிடித்த காசி, இதை சம்மந்தப்பட்ட பெண்களுக்கே அனுப்பி, தான் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும் என கூறி மிரட்டல் விடுத்திருக்கிறார்... இதனால், அதிர்ச்சியடைந்த பெண்கள் பலர், காசியின் சுயரூபமும், அவர் பழகியதின் நோக்கமும் அறிந்து அதிர்ச்சியடைந்தனர்... வீடியோ ஆதாரங்களை வைத்துக்கொண்டு, பல பெண்களின் வாழ்க்கையை தொடர்ந்து சீரழித்து வந்த காசி மீது, பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் கடந்த 2020ல் துணிந்து போலீசில் புகாரளித்தார்...இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அவரை போலவே பல பெண்கள் பாதிக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது... புகாரின் அடிப்படையில், காசியை கைது செய்த போலீசார், அவரின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தியபோது, அதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது... இதையடுத்து, காசியின் கைகளில் விலங்குகள் மாட்டி, நீதிமன்றம் அழைத்து வந்த போலீசார், அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்துவதற்காக நீதிமன்ற வளாகத்தில் அமர வைத்தனர்...
அப்போது, தனது கைகளை ஹார்ட்டின் ஷேப் போல் வைத்துக்கொண்டு, ஊடகங்களை நோக்கி காசி சைகை செய்து கைகளை உயர்த்தியது பரபரப்பை ஏற்படுத்தியது... அவரது ஹார்ட்டின் வடிவ சைகைக்கு கீழ் போலீசாரின் விலங்கு இருந்தது, அவரது சேட்டைக்கு கடிவாளம் இடப்போவதை அன்றே உணர்த்தியது போல, இன்று காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையை வழங்கியிருக்கிறது நீதிமன்றம்..2020ல் சிறையிலடைக்கப்பட்ட காசி, மூன்று வருடமும் சிறைவாசம் அனுபவித்து கொண்டிருந்த நிலையில், இடையிடையே நான்கு முறை ஜாமினுக்கு விண்ணப்பித்தும் நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது... இந்நிலையில், காசி மீது பதியப்பட்ட 8 வழக்குகளில் ஒரு வழக்கின் தீர்ப்பு நாகர்கோவில் நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது... விசாரணைக்கு ஆஜரான காசி, வெள்ளை வேட்டி, சட்டையில் அரசியல்வாதியை போல விறு விறு நடையுடன் வந்த அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்...
அப்போது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக அவருக்கு சாகும் வரை ஆயுள்தண்டனையும், ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதே விறு விறு நடையுடன் வந்த அவரை சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்... இந்த தீர்ப்புக்கு பின்பு, நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த காசி, முதன் முதலில் நீதிமன்றத்தில் ஆஜரான போது எப்படி எந்தவொரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நடந்து கொண்டாரோ... அதே போல் சாகும் வரையிலான ஆயுள் தண்டனை என்ற தீர்ப்புக்கு பிறகும் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல்வாதிகள் மக்களை நோக்கி சைகை செய்வது போல், இரு கரம் கூப்பி வணக்கம் வைத்துக் கொண்டே சென்றார்... இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த அவரது தந்தை தங்கபாண்டியன் விடுதலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 29 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 34 ஆவணங்கள், 20 சான்றுகள் சமர்பிக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றங்கள் குறைய இதுபோன்ற தண்டனைகள் தான் தேவை என்ற கருத்தும் இணையத்தில் முன்வைக்கப்பட்டு வருகிறது..