இ-பைக்குகள் வாங்குவோர் கவனத்திற்கு..!FAME - 2 அதிரடி மாற்றம்... மானியத்தில் கைவைத்த மத்திய அரசு

Update: 2023-05-31 00:05 GMT

மின்சார இரு சக்கர வாகனங்கள் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய FAME - 2 என்ற மானியத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தது. 2024 ஏப்ரல் வரையில் 10 லட்சம் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்க இத்திட்டத்தில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு மின்சார இரு சக்கர வாகனத்திற்கு அதிகபட்சமாக 32,500 ரூபாய் வரை மானியம் அளிக்கப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு மானியம் அளிக்கப்படுவதில்லை.

ஆனால் இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களுக்கும், போலி ஆவணங்கள் தயாரித்து மானியம் பெறப்பட்டுள்ளது கண்டறிப்பட்டது.இதைத் தொடர்ந்து, 2022 ஏப்ரல் முதல் தற்போது வரை சுமார் 1,400 கோடி ரூபாய் அளவிலான மானியத் தொகையை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அளிக்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.FAME - 2 திட்டத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட மின்சார இரு சக்கர வாகனங்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கையை 9,89,000ல் இருந்து 5,64,000ஆக குறைத்துள்ளது. ஜூன் ஒன்று முதல் இத்திட்டத்தின் கீழ் ஒரு கிலோ வாட் அவர் திறனுக்கு வழங்கப்படும் மானியத் தொகை 15,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக குறைக்கப்படுகிறது.விற்பனை விலையில் 40 சதவீதம் மானியத் தொகையாக அளிக்கப்பட்டு வந்தது. இனி இது 15 சதவீதமாக குறைக்கப்படுகிறது.மானியத் தொகை குறைக்கப்பட்டுள்ளதால், மின்சார இரு சக்கர வாகனத் துறையின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படாது என்று ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அருண் குமார் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்