நடுரோட்டில் ஸ்டண்ட் செய்த டிடிஎஃப் வாசன்..விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய மஞ்சள் வீரன்...

Update: 2023-07-05 15:18 GMT

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலை, சர்ச்சை நாயகன் டிடிஎஃப் வாசனால் அன்று பரபரப்புக்குள்ளானது.

விபத்து ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அதை வீடியோ பதிவு செய்தவர்களையும் "இங்க என்ன நடந்துச்சி தெரியுமா... நாங்க பேசி சரி பண்ணிட்டோம், வீடியோ வெளிய வந்தா பிரச்சனையாயிடும்" என போறபோக்கில் மிரட்டி பஞ்ச் டயலாக்கும் பேசிவிட்டு சென்றிருக்கிறார் புதுமுக நாயகன் டிடிஎஃப் வாசன்.

படம் எடுக்க போவதாக அறிவிப்பி வெளியிட்டவர் அடுத்ததாக இந்த விபத்து விவகாரத்தில் சிக்கி சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். அந்த சிவப்பு நிற காரை ஓட்டி சென்றது யார்? நடந்த விபத்து மஞ்சள் வீரன் படத்தின் புரோமஷனா? விபத்திற்கு பிறகு டிடிஎஃப் வாசனும் இயக்குனர் செல் அம் எங்கே எஸ்கேப் ஆனார்கள்?

வெறும் வாசனாக இருந்த இவர் பைக்கில் லடாக் வரை சென்று, டிடிஎஃப் வாசனாக தனக்கு தானே பெயர் சூட்டிக்கொண்டார்.

பொதுமக்களுக்கு இடையூராக அதிவேகத்தில் பைக்கை ஓட்டி, அதை யூடியூப் சேனலில் வீடியோவாக பதிவிட்டு, இளைய தலைமுறைக்கு மிகமோசமான உதாரணமாக மாறியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது.

பேன்ஸ் மீட்டப்.... பர்த்டே மீட்டப்..... கடை திறப்பு விழா என டிடிஎஃப் வாசன் சென்ற இடமெல்லாம் கூடவே பிரச்சனையும் பஞ்சாயத்தும் பின் தொடர்ந்து வந்தன.

கோட்டு போட்டு கோர்ட்டுக்கு சென்று சிக்கியது, காவல் நிலையத்தில் கப்பம் கட்டியது, என பல சரித்திர சம்பவங்கள் அவரின் வாழ்கை பக்கத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.

2கே கிட்ஸ்களின் பவர் ஸ்டாராக இருந்து சர்ச்சையில் சிக்கி போரடித்து போன டிடிஎஃப் திடீரென ரியல் ஹீரோவாக மாற நினைத்து எடுத்த அவதாரம் தான் மஞ்சள் வீரன்.

இந்நிலையில் தான் 299 கிலோ மீட்டர் வேகத்தில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறியிருந்தபோதுதான், சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் டிடிஎஃப் வாசன் சென்ற சிவப்பு நிற கார் விபத்துக்குள்ளானது.

அதிவேகமாக வந்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார், டூவீலரில் வந்த ஒருவரின் மீது மோதி அந்த நபர் படுகாயம் அடைந்துள்ளார். மேலும் காரின் முன்பகுதியும் சேதமடைந்திருக்கிறது.

இந்த விபத்துக்குறித்து வழக்குப்பதிவுச் செய்த போலீசார் டிடிஎஃப் மற்றும் அவருடன் சென்ற மஞ்சள் வீரன் இயக்குனர் செந்தில் செல் அம்மிடமும் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதில் காரை அதிவேகமாக ஓட்டியது இயக்குனர் செல் அம் தான் என தெரியவந்துள்ளது…

இதனால் இயக்குனர் செந்தில் செல்அம் மீது அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய வகையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

இதனால் பதறிப்போன இயக்குனர் செந்தில் செல்அம் காயமடைந்தவரின் மருத்துவ உதவிகளை ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

கால் வைக்குற இடமெல்லாம் கண்ணிவெடி என்று சொல்லும் இந்த வசனம் நிச்சயம் டிடிஎஃப் வாசனுக்கு சரியாக பொருந்துகிறது.

காத்திருந்து பார்போம் அடுத்து வெளி வருவது மஞ்சள் வீரன் அப்டேட்டா அல்லது டிடிஎஃபின் அடுத்த பிரச்சனையா என்று…

Tags:    

மேலும் செய்திகள்